விவசாயிகளின் சந்தேகங்களுக்கு பேராசிரியரின் விளக்கம்

விவசாயிகளின் சந்தேகங்களுக்கு பேராசிரியரின் விளக்கம்
Updated on
1 min read

‘தி இந்து’ நாளிதழில் புதன்கிழமை தோறும் வெளியாகும் ‘நிலமும் வளமும்’ பகுதி’, விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுவருகிறது. இப்பகுதியில் கடந்த ஜூன் 30-ம் தேதி ‘தொழில் முனைவோர் வெற்றிக்கு கால்நடை வளர்ப்பு பயிற்சிகள்’ என்ற தலைப்பில் கட்டுரை வெளியானது.

இதை படித்துவிட்டு 200-க்கும் அதிகமான விவசாயிகள் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக ஆராய்ச்சிப் பண்ணையின் பேராசிரியர் மற்றும் தலைவர் பா.டென்சிங் ஞானராஜை செல்போனில் தொடர்பு கொண்டு ஆர்வத்துடன் பல விவரங்களைக் கேட்டுள்ளனர். சென்னை மாதவரம் பால்பண்ணை பகுதியில் உள்ள ஆராய்ச்சிப் பண்ணைக்கும் பல விவசாயிகள் நேரில் சென்று விவரங்களை சேகரித்து சென்றுள்ளனர்.

செல்போனில் தொடர்பு கொண்டு விவசாயிகள் கேட்ட சந்தேகங்கள் பற்றி பேராசிரியர் டென்சிங் ஞானராஜ் கூறியதாவது:

நல்ல இனத்தைச் சேர்ந்த ஆடு, பசுக்கள், எருமைகள், நாட்டுக் கோழிக் குஞ்சுகள் எங்கு கிடைக்கும் என்று பல விவசாயிகள் கேட்டனர். கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் ஒரிஜினல் தலைச்சேரி ஆட்டுக் குட்டிகள் கிடைக்கின்றன. கிர், சாஹிவால், தர்பார்க்கர் இனப் பசுக்கள் வட இந்திய மாநிலங்களை பூர்வீகமாகக் கொண்டவை. கிர் பசுக்கள் குஜராத்தில் கிடைக்கின்றன. முர்ரா இன எருமைகள் ஹரியாணா, டெல்லியில் கிடைக்கின்றன.

ஒரிஜினல் நாட்டுக் கோழி குஞ்சுகள் பல பகுதிகளில் கிடைக் கின்றன. உங்களுக்கு அருகே உள்ள அரசு கால்நடைப் பண்ணைகளை அணுகினால், அவர்கள் சுற்றுவட்டாரப் பகுதியில் நாட்டுக் கோழி குஞ்சு எங்கு வாங்கலாம் என்ற விவரத்தை தெரிவிப்பார்கள்.

ராமநாதபுரம் மாவட்டப் பகுதிகளைச் சேர்ந்த பெரு விவசாயிகள் சிலர், தங்களிடம் மானாவாரி நிலம் பெருமளவு உள்ளதாகவும், இந்த நிலத்தில் எந்த வகை கால்நடைப் பண்ணை அமைக்கலாம் எனவும் கேட்டனர். அத்தகைய நிலங்களில் மேய்ச்சல் முறையில் ஆடு வளர்ப்பு மற்றும் நாட்டுக் கோழி வளர்ப்புக்கான பண்ணைகளை அமைத்தால் நல்ல லாபம் பெறலாம்.

பரண் மேல் ஆடு வளர்ப்பு முறையில் செம்மறி ஆடு வளர்க்கலாமா, வெள்ளாடு வளர்க்கலாமா என்று பலர் கேட்டனர். வெள்ளாடு வளர்ப்புக்குதான் இந்த முறை ஏற்றது. வெண்பன்றி வளர்ப்பில் அதிக லாபம் கிடைக்குமா என்றும் பலர் ஆர்வத்தோடு விசாரித்தனர். வெண் பன்றி இறைச்சிக்கான தேவை மிக அதிகமாக உள்ளது. ஆனால், அதற்கேற்ற உற்பத்தி இல்லை. எனவே, வெண்பன்றி வளர்ப்பு பண்ணை அமைத்தால் நல்ல லாபம் பெறலாம்.

இவ்வாறு பேராசிரியர் டென்சிங் ஞானராஜ் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in