Published : 31 Jan 2018 10:06 AM
Last Updated : 31 Jan 2018 10:06 AM

செயற்கை நுண்ணறிவால் வேலை வாய்ப்பு பறிபோகாது: டிசிஎஸ் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி கணபதி சுப்ரமணியன் கருத்து

ஆட்டோமேஷன் மற்றும் செயற்கை நுண்ணறிவு காரணமாக வேலை இழப்புகள் உருவாகும் என்பது மிகைப்படுத்தப்பட்டது. இதன் காரணமாக நிறுவனம் விரிவடையும். தவிர பணியாளர்களை புதிய தேவைக்கு தயார் படுத்துவது நிறுவனத்தின் பணி என டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி என்.கணபதி சுப்ரமணியம் தெரிவித்தார். நிறுவனத்தில் 35 ஆண்டு காலம் தொடர்ந்து பணியாற்றி வரும் இவர் கடந்த வாரம் டாவோஸ் மாநாட்டில் கலந்து கொண்டார். அங்கு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஐடி துறையில் மாற்றம் ஒன்றே மாறாதது. எங்கள் நிறுவனத்தில் மாற்றம் என்று குறிப்பிடுவதை விட புதிய விஷயத்தை கற்றுக்கொள்ளுதல் என்றே குறிப்பிடுகிறோம். ஐடி துறையில் மூன்று முதல் ஐந்தாண்டுகளுக்கு மாற்றம் ஏற்பட்டு வருகிறது. அதற்கேற்ப பணியாளர்களின் தரத்தை உயர்த்தி வருகிறோம். ஆரம்ப காலத்தில் இருந்தே எங்கள் துறையில் மாற்றம் நடந்துகொண்டிருக்கிறது. ஆனால் எங்கள் பணியாளர்களின் பணிப் பாதுகாப்பை தொடர்ந்து உறுதி செய்து வருகிறோம்.

ஐடி துறையில் இருக்கும் பணியாளர்கள் தொடர்ந்து தங்களை புதுப்பித்துக்கொண்டே இருக்கின்றனர். தங்களுடைய தொழில்நுட்ப அறிவை தொடர்ந்து வளர்த்துக்கொண்டே இருக்கின்றனர். ஆனால் தொழில்நுட்ப அறிவை தவிர பிற துறை சார்ந்த பல விஷயங்களை பணியாளர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும். வாடிக்கையாளர்கள் தொழில் எப்படி செல்கிறது, சம்பந்தப்பட்ட துறை எப்படி இருக்கிறது போன்றவற்றை பணியாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இவை வாடிக்கையாளர்களுக்கு மிகவும் முக்கியமானதாகும். இதில் மற்ற நிறுவனங்களை விட டிசிஎஸ் முன்னணியில் இருக்கிறது என்றார்.

வேலை இழப்பு குறித்து பேசிய கணபதி சுப்ரமணியன், இந்தியர்கள் சவால்களை எதிர்கொள்ளவும், புதிய விஷயங்களை கற்றுக்கொள்ளவும் ஆர்வமாக தயாராக இருப்பார்கள் என்னும் நம்பிக்கை இருக்கிறது. தற்போதைய பணியாளர்களில் 60 சதவீதம் முதல் 70 சதவீத பணியாளர்களுக்கு வேலை இழப்புகள் உருவாகும் என சில அறிக்கைகள் கூறுகின்றன. இவை பொறுப்பற்ற அறிக்கைகள் என்று மட்டுமே கூற முடியும். இவ்வளவு வேலை இழப்புகள் உருவாகும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை.

பணியாளர்களின் திறமையை உயர்த்தும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். சில நிறுவனங்கள் புதிய தொழில் நுட்பத்துக்காக நிறுவனங்களை கையகப்படுத்தும் நடவடிக்கைகள் கூட எடுத்து வருகின்றன. எங்கள் பணியாளர்களின் தகுதியை உயர்த்துவதற்கு முதலீடு செய்ய தயாராக இருக்கிறோம். ஏற்கெனவே அதை செய்து வருகிறோம். கடந்த ஓர் ஆண்டில் புதிய பிரிவில் பல திட்டங்களை பெற்றிருக்கிறோம். எங்கள் அனுபவத்தில் புதிய தொழில் நுட்பம் மூலம் புதிய வாய்ப்புகள் உருவாகி வருகிறது. இதுவரை வேலை இழப்பை நாங்கள் பார்க்கவில்லை. வேலைக்கு எடுப்பது மற்றும் நீக்குவது என்பது டிசிஎஸ் நிறுவனத்தின் கொள்கை இல்லை. புதிய திறமைகளை வளர்த்துக்கொள்ளும் வரை பிரச்சினை இல்லை. புதிய திறன்களை கற்றுக்கொடுப்பது நிறுவனத்தின் பொறுப்பு என கணபதி சுப்ரமணியன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x