கணினி எம்பிராய்டிங் மூலம் நூலிழையில் கலைவண்ணம்: வருவாய் ஈட்ட வழிகாட்டும் மதுரை பெண்

கணினி எம்பிராய்டிங் மூலம் உருவாக்கப்பட்ட ராதை கிருஷ்ணன் உருவம்.
கணினி எம்பிராய்டிங் மூலம் உருவாக்கப்பட்ட ராதை கிருஷ்ணன் உருவம்.
Updated on
2 min read

மதுரை: கணினி எம்பிராய்டிங் மூலம் நூலிழையில் கலைவண்ணம் காண்பதோடு, அதன் மூலம் பெண்கள் வீட்டிலிருந்தபடியே வருவாய் ஈட்டலாம் என வழிகாட்டுகிறார் மதுரை பெண்மணி சசிகலா. மதுரை வில்லாபுரம் வாசுகி தெருவைச் சேர்ந்த கண்ணன் என்பவர் மனைவி சசிகலா (42). கண்ணன் இரும்புக் கதவுகள் செய்யும் பட்டறை வைத்துள்ளார். கரோனா காலத்தில் தொழில் முடங்கியதால், சசிகலா கைத்தொழிலாக கம்ப்யூட்டர் எம்பிராய்டிங் கற்றார். பெண்கள் அணியும் மேலாடையில் எம்பிராய்டிங் செய்தார். பின்னர், சினிமா நடிகர்கள், அரசியல் தலைவர்கள், இயற்கை காட்சிகள், ராதை கிருஷ்ணன் என கடவுள் படங்கள் ஆகியவற்றை நூலிழையில் உருவாக்கி, அதனை போட்டோ பிரேம் செய்து விற்பனை செய்து வருகிறார்.

இதேபோன்று, மற்ற பெண்களும் சுயதொழில் கற்று வருவாய் ஈட்ட பயிற்சியும் அளித்து வருகிறார். மேலும், சமூக வலைதளங்களில் பதிவிட்டு வேலைவாய்ப்புகளை உருவாக்கி, பலருக்கும் வேலைவாய்ப்பு அளித்து வருகிறார். இதுகுறித்து சசிகலா கூறியதாவது: எனக்கு சிறுவயதிலிருந்தே தையல் தெரியும். பிளஸ் 2 வரை படித்துள்ளேன். கரோனா காலத்தில் யூடியூப்பில் கம்ப்யூட்டர் எம்பிராய்டிங் பற்றிய விளம்பரத்தை பார்த்து தெரிந்து கொண்டேன். முதலில் ரூ.1 லட்சத்துக்கு கம்ப்யூட்டர் எம்பிராய்டிங் மிஷினை எனது கணவர் வாங்கித் தந்தார். கரோனா காலத்தையே பயிற்சி காலமாக்கினேன். பெண்களின் ஆடைகளுக்கு வித விதமாக எம்பிராய்டிங் செய்தேன்.

சசிகலா
சசிகலா

இதன் மூலம் வாடிக்கையாளர்கள் கிடைத்தனர். மேலும், கடவுள்கள், இயற்கை காட்சிகள், சினிமா நடிகர்கள், அரசியல் தலைவர்கள் ஆகியோரது படங்களையும் கணினி எம்பிராய்டிங் மூலம் உருவாக்கி, அவற்றை போட்டோ பிரேமாக்கி விற்பனை செய்து வருகிறேன். இத்தகைய நூலிழையில் உருவான படங்களை விழாக்களில் அன்பளிப்பாகவும் வழங்குகின்றனர். அதேபோல், பிறந்த நாள் விழா கொண்டாடுவோருக்கும் தயார் செய்து வருகிறோம். இதன் மூலம் நிறைய வேலைவாய்ப்புகள் கிடைக்கின்றன. வீட்டிலிருந்தவாறே பெண்கள் சுயமாகத் தொழில் செய்யவும், தொழில்முனைவோராகவும் பயிற்சி அளிக்கிறேன். இதன் மூலம் 20-க்கும் மேற்பட்டோர் இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இலவசம் என்றால் அதற்கு மதிப்பிருக்காது என்பதால், சிறு தொகையை கட்டணமாகப் பெற்றுக்கொண்டுபயிற்சி அளிக்கிறேன். எனது மகள் தாமரைச்செல்வி, மகன் பாலசரவணன் ஆகியோர் சமூக வலைதளங்களில் போட்டோ, வீடியோக்கள் எடுத்து அனுப்புவதில் உதவி புரிகின்றனர். இதன் மூலம் வெளிநாடுகளிலிருந்தும் வேலைவாய்ப்பு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in