Published : 19 Dec 2023 05:08 PM
Last Updated : 19 Dec 2023 05:08 PM

சர்வதேச பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவின் பங்கு 16% - ஐஎம்எஃப்

புதுடெல்லி: சர்வதேச பொருளாதார வளர்ச்சியில் இந்தியா 16 சதவீதத்துக்கும் அதிகமாகக் கொண்டிருப்பதாக சர்வதேச செலாவணி நிதியம் (ஐஎம்எஃப்) தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஐஎம்எஃப் வெளியிட்டுள்ள வருடாந்திர அறிக்கையின் விவரம்: ‘உலகளாவிய சவால்களுக்கு இடையே இந்தியாவின் பொருளாதார உறுதியும், வளர்ச்சியும் பாராட்டுக்குரியது. சர்வதேச பொருளாதார வளர்ச்சியில் இந்தியா நட்சத்திர செயல்பாட்டாளராக வளர்ந்து வருகிறது. உலகளாவிய வளர்ச்சியில் இந்தியாவின் பங்களிப்பு 16 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது. விவேகமான பொருளாதார கொள்கைகளின் வழிகாட்டுதலோடு இந்த ஆண்டு உலகில் அதிவேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா இருக்கிறது.

வளர்ச்சிக்கு முக்கியமாகத் தேவைப்படும் அடிப்படை உள்கட்டமைப்பு, போக்குவரத்து மேம்பாடு ஆகியவற்றில் முதலீடு செய்வதற்கு இந்திய அரசு மிக வலுவான உந்துதலை அளித்துள்ளது. இந்த அரசு பல்வேறு கட்டமைப்பு சீர்திருத்தங்களை செய்துள்ளது. இவற்றில் மிக முக்கியமானது டிஜிட்டல்மயம் ஆகும். பல ஆண்டுகளாக கட்டமைக்கப்படுகின்ற டிஜிட்டல்மயம் சார்ந்த உற்பத்தித் திறன் அதிகரிப்பு, இந்தியாவின் எதிர்கால வளர்ச்சிக்கு வலுவான அடித்தளத்தை அளித்துள்ளது. நடப்பு நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 6.3 சதவீதம் வளர்ச்சியை பெறும் என்று நாங்கள் மதிப்பிடுகிறோம்.

விரிவான சீர்திருத்தங்கள் அமலாக்கப்படும் பட்சத்தில், தொழிலாளர் மற்றும் மக்கள் திரட்சியின் மகத்தான பங்களிப்புடன் இன்னும் கூடுதலான வளர்ச்சியைப் பெறும் ஆற்றலை இந்தியா கொண்டிருக்கிறது. நிதி சார்ந்த குறைபாடுகளை சரிசெய்தல், விலையில் நிலைத்தன்மையை உறுதி செய்தல், நிதி சார்ந்த நிலைத்தன்மையைப் பராமரித்தல், விரிவான கட்டமைப்பு சீர்திருத்தங்கள் மூலம் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியைத் துரிதப்படுத்துதல் ஆகியவற்றில் இந்தியா கவனம் செலுத்த வேண்டும்.

இந்திய ரிசர்வ் வங்கியின் சாதகமான நிதிக்கொள்கை செயல்பாடுகள், நிலைத்தன்மைக்கு வலுவான உறுதிப்பாட்டை அளித்துள்ளது. தரவு சார்ந்த அணுகுமுறையில் தற்போதைய சமநிலை நிதிக்கொள்கை நிலைப்பாடு பொருத்தமானது. இது பணவீக்க விகிதத்தைப் படிப்படியாகக் குறைக்கும். உலக அளவிலான பொருட்களின் விலை உயர்வை தொடர்ந்து ஏற்பட்ட அதிகபட்ச பணவீக்கத்தை குறைப்பதற்கு, இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு 2022 – 2023-ல் ரெப்போ விகிதத்தை 250 அடிப்படைப் புள்ளிகளிலிருந்து 6.5 சதவீதத்திற்கு உயர்த்தியது’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x