

சூரத்: குஜராத் மாநிலத்தில் சூரத் வைர சந்தை கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார். இதன்மூலம் அமெரிக்காவின் ராணுவ தலைமையகத்தை பின்னுக்குத் தள்ளி உலகிலேயே மிகப்பெரிய அலுவலக கட்டிடமாக உருவெடுத்துள்ளது.
குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள விமான நிலையத்தில் புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். இது பரபரப்பான நேரத்தில் 600 சர்வதேச பயணிகள் மற்றும் 1,200 உள்நாட்டு பயணிகளை கையாளும் திறன் கொண்டது. ஆண்டுக்கு 55 லட்சம் பயணிகளை கையாளும் திறனைக் கொண்டுள்ளது.
இதையடுத்து, உலகின் மிகப்பெரிய அலுவலக கட்டிடமான சூரத் வைரச் சந்தையை (எஸ்.டி.பி.) பிரதமர் மோடி திறந்து வைத்தார். சூரத் நகருக்கு அருகே காஜோட் கிராமத்தில் அமைந்துள்ள இந்த கட்டிடம் 67 லட்சம் சதுர அடி பரப்பளவைக் கொண்டுள்ளது. அதிநவீன வசதிகளைக் கொண்டுள்ள இந்த கட்டிடம், பட்டை தீட்டப்படாத மற்றும்பட்டை தீட்டப்பட்ட வைரங்கள் மற்றும் நகைகளின் சர்வதேச வர்த்தக மையமாக விளங்கும். இதன்மூலம் அமெரிக்காவின் ராணுவ தலைமையகத்தை பின்னுக்குத் தள்ளி உலகிலேயே மிகப்பெரிய அலுவலக கட்டிடமாக இது உருவெடுத்துள்ளது. இந்தக் கட்டிடத்தை திறந்து வைத்த பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
சூரத் வைரச் சந்தை கட்டிடம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இது புதிய இந்தியாவின் புதிய வலிமை மற்றும் புதிய தீர்மானத்தின் அடையாளமாக விளங்கும். சூரத் மக்களுக்கு இன்று மேலும் 2 பரிசுகள் கிடைத்துள்ளன. ஒன்று சூரத் விமான நிலையத்துக்கான புதிய முனையம். இரண்டாவதாக அதற்கு சர்வதேச விமான நிலைய அந்தஸ்து கிடைத்துள்ளது.
நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, அடுத்த 25 ஆண்டுகளுக்கான இலக்கை மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. அது 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக இருந்தாலும் சரி அல்லது 10 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக இருந்தாலும் சரி, அந்த இலக்கை அடைய அரசு பணியாற்றி வருகிறது. என்னுடைய மூன்றாவது பதவிக்காலத்தில் உலகின் முதல் மூன்று பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா இடம்பெற வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.
மோடி உத்தரவாதத்தின் விளைவாக சூரத் வைரச் சந்தை நிறுவப்பட்டுள்ளது. இன்று உலகின் முதல் 10 வளரும் நகரங்களில் ஒன்றாக சூரத் விளங்குகிறது. சூரத்தின் தெருவோர உணவு, திறன் மேம்பாட்டுப் பணி என எல்லாமே அற்புதமாக உள்ளன. சூரத் ஒரு காலத்தில் ‘சன் சிட்டி' என்று அழைக்கப்பட்டது. ஆனால் இன்று இங்குள்ள மக்கள், தங்கள் கடின உழைப்பால் இதை ‘வைர நகரமாக' மாற்றியுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
வைர சந்தை கட்டிடத்தின் சிறப்பு அம்சங்கள்: சூரத் வைரச் சந்தை கட்டிடத்தில் ஏற்றுமதி, இறக்குமதிக்காக சுங்கவரித் துறை அலுவலகம், சில்லறை நகை வணிக வளாகம், சர்வதேச வங்கிக் கிளைகள் மற்றும் பாதுகாப்பு பெட்டக வசதி உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கும்.
இந்த கட்டிடத்தில் உள்ள அலுவலகங்களை எஸ்.டி.பி. நிர்வாகம் ஏலம் மூலம் ஒதுக்கீடு செய்கிறது. ஏற்கெனவே மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பல்வேறு முன்னணி வைர வியாபாரிகள் இந்த புதிய கட்டிடத்தில் அலுவலகங்களை ஏலத்தில் வாங்கி உள்ளனர் என எஸ்.டி.பி. ஊடக ஒருங்கிணைப்பாளர் தினேஷ் நவாதியா தெரிவித்தார். இந்த கட்டிடம் வைர ஆராய்ச்சி மற்றும் வணிக (கனவு) நகரத்தின் ஒரு அங்கம் ஆகும்.
கடந்த 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அப்போது குஜராத் முதல்வராக இருந்த ஆனந்திபென் படேல் இந்த கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டினார். 67 லட்சம் சதுர அடி பரப்பளவு கொண்ட எஸ்.டி.பி. தற்போது 4,500 வைர வர்த்தக அலுவலகங்களுடன் உலகின் மிகப்பெரிய அலுவலக கட்டிடமாக திகழ்கிறது. 35.54 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்ட இந்த மெகா கட்டமைப் பில், 300 சதுர அடி முதல் 1 லட்சம் சதுர அடி வரையிலான அலுவலகங்கள் உள்ளன. இதில் 15 மாடிகளைக் கொண்ட ஒன்பது கோபுரங்கள் உள்ளன.