

நாமக்கல்: நாமக்கல் கோட்டத்தில் உள்ள தபால் அலுவலகங்களில் தங்கப் பத்திரம் விற்பனை தொடங்கியுள்ளது.
இது தொடர்பாக நாமக்கல் கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நாமக்கல் கோட்டத்தில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் தங்கப் பத்திரம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒருவர் ஒரு கிராம் முதல் 4,000 கிராம் வரை தங்கப் பத்திரங்களை வாங்கலாம். தங்கப் பத்திரத்தின் முதலீட்டுக் காலம் 8 ஆண்டுகள் ஆகும். 8 ஆண்டுகள் இறுதியில் அன்றைய தேதியில் உள்ள மதிப்பில் தங்கப் பத்திரத்தைப் பணமாக மாற்றிக் கொள்ளலாம்.
தேவைப்பட்டால் 5 ஆண்டுகள் முடிந்த பின்னர் தங்கப் பத்திரத்தைப் பணமாக மாற்றிக் கொள்ளும் வசதியும் உள்ளது. இத்திட்டம் நீண்ட கால சேமிப்புத் திட்டமாகும். இத்திட்டத்தின் மூலம் செய்யப்படும் முதலீட்டுக்கு மத்திய ரிசர்வ் வங்கியின் மூலம் ஆண்டுக்கு 2.5 சதவீதம் வட்டி கணக்கிட்டு ஒவ்வொரு 6 மாதமும் முதலீட்டாளர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். இது தங்கப் பத்திர முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும் கூடுதல் வருவாய் ஆகும்.
இத்திட்டம் இன்று ( 18-ம் தேதி ) முதல் வரும் 22-ம் தேதி வரை அனைத்து தபால் அலுவலகங்களிலும் செயல்படும். இதில் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.6,199 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அஞ்சலகங்களில் தங்கப் பத்திரத்தில் பணம் செலுத்துபவர்களுக்கு அஞ்சலக ரசீது வழங்கப்படும். சுமார் 20 நாட்களுக்கு பின்னர் தங்கப் பத்திரம் வழங்கப்படும். முதலீடு செய்ய விரும்புவோர் அருகிலுள்ள தபால் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
தபால் அலுவலகம் செல்ல இயலாதவர்கள், வணிக வளர்ச்சி அலுவலர்களான சிவக்குமார் ( 98941 12154 ), சங்கர் ( 90428 55559 ) ஆகியோரை தொடர்பு கொள்ளலாம். இதில் முதலீடு செய்ய முதலீடு செய்பவரின் ஆதார் எண், பான் கார்டு மற்றும் வங்கிக் கணக்கு அவசியம். கடந்த 2015-ம் ஆண்டு முதல் தங்கப் பத்திர திட்டத்தில் 100 கிராம் ரூ. 2,68,400 முதலீடு செய்த முதலீட்டாளர்களுக்கு 8 ஆண்டுகள் முடிந்து ரூ. 6,13,200 முதிர்வுத் தொகை அவர்களுடைய வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது.
மேலும், கூடுதலாக ரூ. 53,680 வட்டியாக வழங்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் அனைவரும் அதிக லாபம் தரக்கூடிய அஞ்சலக தங்கப் பத்திர திட்டத்தில் முதலீடு செய்து பயன்பெறலாம் என்று தெரிவித்துள்ளார்.