Published : 18 Dec 2023 04:12 AM
Last Updated : 18 Dec 2023 04:12 AM
பெரம்பலூர்: சின்ன வெங்காய ஏற்றுமதிக்கு விதித்துள்ள தடையை மத்திய அரசு நீக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து அச்சங்கத்தின் மாநிலச் செயலாளர் ஆர்.ராஜா சிதம்பரம் வெளியிட்ட அறிக்கை: 2024 மக்களவைத் தேர்தல் வரவுள்ளதால், வெங்காயத்தின் விலை அதிகரித்து விடாமல் கட்டுக்குள் இருக்கும் வகையில் வெங்காய ஏற்றுமதிக்கு டிச.8 முதல் அடுத்தாண்டு மார்ச் 31-ம் தேதி வரை மத்திய அரசு தடை விதித்து அறிவித்துள்ளது.
இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் வெங்காயத்துக்கு, மத்திய அரசு ஏற்கெனவே 40 சதவீதம் வரிவிதித்து வெங்காய விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை உருவாக்கியது. அதிலிருந்து விவசாயிகள் மீள்வதற்குள், தற்போது வெங்காய ஏற்றுமதிக்கே தடை விதித்துள்ளது மேலும் பேரிழப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் இரண்டுக்கும், தற்போது ஒரே ஏற்றுமதி குறியீட்டு எண் இருப்பதால், பெரிய வெங்காயத்துக்கு மத்திய அரசு ஏற்றுமதி தடை விதிக்கும் போதெல்லாம், சின்ன வெங்காயத்தின் ஏற்றுமதியும் தடை செய்யப்படுகிறது. இதனால், சின்ன வெங்காயம் பயிர் செய்துள்ள விவசாயிகள், போதிய விலை இன்றி கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
பெரிய வெங்காயம்போல, சின்ன வெங்காயத்தைஇந்தியா முழுவதும் உபயோகப் படுத்துவதில்லை. தென் மாநிலங்களில் மட்டுமே அதிகம் உபயோகப்படுத்தப்படுகிறது. எனவே, சின்னவெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிப்பது தேவையற்றது. 2 வகையான வெங்காயத்துக்கும் ஒரே ஏற்றுமதி குறியீட்டு எண் தற்போது நடைமுறையில் உள்ளதைப் பிரித்து, சின்ன வெங்காயத்துக்கென தனி ஏற்றுமதி குறியீட்டு எண்ணை உருவாக்க வேண்டும்.
மத்திய அரசு சின்ன வெங்காய உற்பத்திக்கு எவ்வித மானியமும் அளிப்பதில்லை. விலை நிர்ணயமும் கிடையாது. வெங்காயம் சாகுபடி செய்யும் விவசாயிகள் பூச்சி, நோய் தாக்குதல், இயற்கை பேரிடர்கள் மூலம் பாதிக்கப்பட்டு கடுமையான நஷ்டம் அடையும்போது நிவாரணம் வழங்காத அரசு, சின்ன வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிப்பது, 40 சதவீத ஏற்றுமதி வரி விதிப்பது ஆகியவை விவசாய விரோதப்போக்காகும்.
எனவே, சின்ன வெங்காய ஏற்றுமதிக்கு விதித்துள்ள தடையை மத்திய அரசு நீக்குவதுடன், 40 சதவீத ஏற்றுமதி வரியையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும். சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயத்துக்கு தனித்தனி ஏற்றுமதி குறியீட்டு எண் வழங்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT