

கோவை: திருமணம் உள்ளிட்ட அனைத்து சுப காரியங்களுக்கும் தங்கம் வாங்குவதை மக்கள் வாடிக்கையாக கொண்டுள்ள நிலையில், தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சமீபத்தில் ஒரு பவுன் ஆபரண தங்கம் ரூ.47 ஆயிரத்தை கடந்துள்ளது.
இது குறித்து, கோவை தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் முத்து வெங்கட் ராமன் கூறியதாவது: தங்கத்தின் விலை ஒரு பவுன் ரூ.48 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. எதிர்வரும் நாட்களிலும் தங்கத்தின் விலை உயரவே அதிக வாய்ப்புள்ளது. விரைவில் ஒரு பவுன் தங்கம் ரூ.50 ஆயிரத்தை எட்டும். திருமண சீசன் சமயத்தில் கோவையில் தினமும் 200 கிலோஎடையிலான தங்க நகை வணிகம் நடைபெறும். ஆனால் தற்போது 50 சதவீதம் மட்டுமே நடைபெறுகிறது.
திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கு தங்க நகைகளை வாங்க வருபவர்கள் வாங்கும் நகைகளின் அளவை குறைத்துக் கொள்கின்றனர். ஆரம் உள்ளிட்ட பெரிய அளவிலான நகைகள் விற்பனை கடந்த ஓராண்டுக்கு மேல் வெகுவாக குறைந்துள்ளது. இந்நிலை நீடித்தால் கோவை தங்க நகை தொழிலில் வேலை வாய்ப்பு பெற்றுள்ள ஒரு லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் நிலை ஏற்படும். மத்திய அரசு தங்கத்திற்கு 3 சதவீத ஜிஎஸ்டி மற்றும் 15 சதவீத இறக்குமதி வரியை விதிக்கிறது.
தொழில் துறையினர் சார்பில் இறக்குமதி வரியை 11 சதவீதத்திலிருந்து குறைக்க கோரிக்கை விடுத்து வந்த நிலையில், 15 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது. இன்றைய சூழலில் மத்திய அரசு இறக்குமதி வரியை 5 சதவீதமாக குறைத்தால் ஒரு சவரன் ரூ.5 ஆயிரம் வரை குறைய வாய்ப்புள்ளது. மக்கள் நலனை கருதி மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.