

மும்பை: இந்திய பங்குச் சந்தைகள் நேற்று புதிய உச்சத்தைத் தொட்டன. சென்செக்ஸ் 70 ஆயிரம் புள்ளிகளையும் நிப்டி 21 ஆயிரம் புள்ளிகளையும் கடந்து புதிய சாதனை படைத்தன.
இந்திய பங்குச் சந்தைகள் கடந்த சில தினங்களாக தொடர்ந்து புதிய உச்சங்களை தொட்டு வருகின்றன. அந்த வகையில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண்ணான சென்செக்ஸ் நேற்று 929 புள்ளிகள் அதிகரித்து 70,514-ல் நிலைபெற்றது. சென்செக்ஸ் முதன்முறையாக 70 ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் நிலைபெற்று சாதனை படைத்துள்ளது. இதுபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண்ணான நிப்டி, நேற்று 256 புள்ளிகள் உயர்ந்து 21,182-ல்நிலைபெற்றது. நிப்டியும் 21 ஆயிரம் புள்ளிகளைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.
பங்குச் சந்தை உயர்வின் மூலம் நேற்று ஒரே நாளில் முதலீட்டாளர்களுக்கு ரூ.3.91 லட்சம் கோடி லாபம் கிடைத்தது. இதன்மூலம் இந்திய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் ஒட்டுமொத்த மதிப்பு ரூ.355.1 லட்சம் கோடியாக உயர்ந்தது. நேற்றைய வர்த்தகத்தில் 1,851 பங்குகள் உயர்ந்த நிலையில் 1,363 பங்குகள் சரிவை சந்தித்தன.
வட்டி விகிதம் எவ்வித மாற்றமும் இல்லாமல் 5.25% முதல் 5.5% ஆக நீடிக்கும் என அமெரிக்க மத்திய வங்கி நேற்று அறிவித்தது. மேலும் வரும் 2024-ல் 3 முறை வட்டி விகிதம் குறைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. இதனால் சர்வதேச பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட உயர்வு இந்திய பங்குச் சந்தையிலும் எதிரொலித்தது.