

புதுக்கோட்டை: கார்த்திகை மாதத்தின் கடைசி முகூர்த்தம் என்பதாலும், பனிப்பொழிவு அதிகமாக இருப்பதாலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மல்லி, முல்லை மற்றும் கனகாம்பரம் ஆகிய பூக்கள் கிலோ ரூ.1,000-க்கும் மேல் விற்பனையாகின.
ஆலங்குடி மற்றும் கறம்பக்குடி வட்டாரத்தில் ஏராளமான விவசாயிகள் மல்லிகை, சம்பங்கி, ரோஜா, காக்கரட்டான், செண்டி, முல்லை, அரும்பு, பிச்சிப்பூ உள்ளிட்ட பூ வகைகளை சாகுபடி செய்துள்ளனர். இங்கு விளைவிக்கப்படும் பூக்கள் புதுக்கோட்டை, கீரமங்கலம், மாங்காடு, வடகாடு உள்ளிட்ட இடங்களில் உள்ள மண்டிகளில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
தினசரி சுமார் 10 டன்பூக்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக வணிகர்கள் கூறுகின்றனர். இந்நிலையில், கார்த்திகை மாதத்தில்நேற்று கடைசி முகூர்த்தமாக இருந்தது. அதிக எண்ணிக்கையில் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனால், கடந்த 2 நாட்களாக மல்லிகை, முல்லை மற்றும் கனகாம்பரம் ஆகிய பூக்கள் கிலோ தலா ரூ.1,000-க்கு மேல் விற்பனையாகின.
இது குறித்து கீரமங்கலம் பூ மார்க்கெட் வணிகர்கள் கூறியது: மார்கழி மாதத்தில் திருமணங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறாது. இதனால், கார்த்திகை மாதத்தில் கடைசி முகூர்த்த நாளான நேற்று எங்கு பார்த்தாலும் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதையொட்டி, நேற்று மல்லிகை மற்றும் முல்லை தலா ரூ.1,200-க்கு விற்பனையாகின. கனகாம்பரம் ரூ.1,000-க்கு விற்பனையானது.
இதே போன்று, நேற்று முன்தினம், மல்லிகை மற்றும் முல்லை தலா ரூ.1,500-க்கும், கனகாம்பரம் ரூ.1,000-க்கும், காக்கரட்டான் ரூ.500, சம்பங்கி ரூ.80-க்கும் விற்பனையானது. தற்போது, மார்கழி தொடங்கும் முன்பே பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால் பூக்கள் உற்பத்தி குறைந்து வரும் நிலையில், விலை உயர்ந்திருந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர் என்றனர்.