

கோவை: கடந்த 5 ஆண்டுகளில் தொழில் முனைவில் மகளிர் பங்களிப்பு 20 சதவீதம் உயர்ந்துள்ளது என கோவையில் நடந்த மகளிருக்கான தேசிய அளவிலான ஸ்டார்ட் - அப் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது.
இந்திய தொழில் வர்த்தக சபையின் மகளிர் பிரிவான பிக்கி லேடீஸ் ஆர்கனைசேஷன் ( எப்எல்ஓ ), கோவையில் ‘ஷீ ரைசஸ்’ என்ற தலைப்பில் மகளிருக்கான தேசிய அளவிலான ஸ்டார்ட் - அப் மாநாட்டை நடத்தியது. மாநாட்டில், 16 வகையான தொழில் பிரிவுகளை சார்ந்த பெண்கள் பங்கேற்று, சவால்களுக்கு இடையே உள்ள வாய்ப்புகள் குறித்து பேசினர். சவுமியா கேசவா முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியின் தலைவர் பூனம் பப்னா நிகழ்வின் முக்கிய அம்சங்கள் குறித்து விளக்கினார். பி.எஸ்.ஜி. கல்லூரியின் முதல்வர் பிருந்தா தலைமை வகித்து பேசும்போது, ‘‘சமீபத்திய கணக்கெடுப்பின்படி, கடந்த 5 ஆண்டுகளில் தொழில் முனைவில் மகளிர் பங்களிப்பு 20 சதவீதம் உயர்ந்துள்ளது. நாட்டில் 1.5 கோடி பெண்கள் தொழில் செய்து வருகின்றனர்.
2.2 கோடி முதல் 2.7 கோடி பேருக்கு வேலை வாய்ப்புகளை அளித்து வருகின்றனர். அடுத்த 5 ஆண்டுகளில் மகளிர் தொழில் முனைவோரின் எண்ணிக்கை கணிசமாக உயரும்” என்றார்.
கோவை பிக்கி புளோ அமைப்பின் தலைவர் ரமா ராஜசேகர், ஸ்வாதி ரோஹித், பிளாட்டோ கலாணி நிறுவன இணை நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ரவி கல்லாயில், கேப்டஸ்ட் அன்ட் சியோ பிலிப் இணை நிறுவனர் யமுனா சாஸ்திரி, டிபிஆர் வெஞ்சர்ஸ் நிறுவனத்தின் செயல் அதிகாரி ஆர்த்தி குப்தா ஆகியோர் பேசினர்.