Published : 10 Dec 2023 06:59 AM
Last Updated : 10 Dec 2023 06:59 AM
சென்னை: புயல் காரணமாக, சென்னையில்பல இடங்களில் ரயில் தண்டவாளங்கள் மழை நீரில் மூழ்கி, ரயில் சேவை பாதித்தது.
ஏராளமான ரயில்கள் இயக்கப்படாமல் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. 4 முதல் 5 நாட்கள் வரை ரயில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக, தெற்கு ரயில்வேக்கு ரூ.35 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது: புயல் காரணமாக, தெற்கு ரயில்வேயில் 605 மெயில் மற்றும் விரைவு ரயில்களின் போக்குவரத்து 4 நாட்களாக கடுமையாக பாதிக்கப்பட்டன. இவற்றில் 449 ரயில்களின் போக்குவரத்து முழுமையாக ரத்து செய்யப்பட்டது. மேலும், 51 ரயில்கள் பாதிதூரம் இயக்கப்பட்டு ரத்து செய்யப்பட்டன. 40 ரயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. மேலும், 60 ரயில்கள் புறப்படும் இடங்கள் மாற்றப்பட்டன.
இதுதவிர, சென்னை புறநகர் மின்சார ரயில்களும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன. அதேநேரத்தில், சென்னை கடற்கரை- அரக்கோணம் இடையே சிறப்புபயணிகள் ரயில்கள் இயக்கப்பட்டன. விரைவு ரயில்கள், புறநகர் மின்சார ரயில் சேவை ரத்து மூலமாக, தெற்கு ரயில்வேக்கு ரூ.35 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT