Published : 11 Jan 2018 10:38 AM
Last Updated : 11 Jan 2018 10:38 AM

ஜேபி அசோசியேட்ஸ் ரூ. 125 கோடி செலுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு

இம்மாதம் 25-ம் தேதிக்குள் ரூ.125 கோடியை செலுத்த வேண்டும், இல்லையெனில் திகார் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டியிருக்கும் என்று ஜேபி அசோசியேட்ஸ் நிறுவனத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முதலீட்டாளர்களிடம் வீடு கட்டித் தருவதாக பணத்தைத் திரட்டி அதை திருப்பித் தராததால் வாடிக்கையாளர்கள் நீதிமன்றம் சென்றனர். வங்கிகளில் அதிக கடன் சுமை உள்ளதால் இந்நிறுவன சொத்துகளை திவால் மசோதா சட்டத்தின்படி விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது.

திவால் நடவடிக்கை எடுத்தால் அது நிறுவன செயல்பாடுகளை பாதிக்கும் என்று கூறி திவால் நடைமுறை சட்டத்துக்கு தடை விதிக்குமாறு உச்ச நீதிமன்றத்தை ஜேபி அசோசியேட்ஸ் அணுகியது. இம்மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம். கன்வில்கர், டிஒய் சந்திர சூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

ஏற்கெனவே ரூ.2,000 கோடியை நீதிமன்ற கருவூலத்தில் செலுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதில் முதல் தவணையாக ரூ.125 கோடியை இம்மாதம் 25-ம் தேதிக்குள் செலுத்தவேண்டும் என கூறப்பட்டிருந்தது.

திவால் மசோதா நடவடிக்கையை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை மனுவை பரிசீலிப்பதற்கு முன்பாக தவணைத் தொகையான ரூ.125 கோடியை செலுத்த வேண்டும். இல்லையேல் சம்பந்தப்பட்ட நபர்கள் திகார் செல்லத் தயாராகுங்கள் என நீதிபதிகள் தெரிவித்தனர்.-பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x