

தனியார் வங்கியான இண்டஸ்இந்த் வங்கியின் டிசம்பர் காலாண்டு நிகர லாபம் 24.72 சதவீதம் உயர்ந்து ரூ.936 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.750 கோடியாக நிகர லாபம் இருந்தது. வங்கியின் மொத்த வருமானம் 16.05 சதவீதம் உயர்ந்து ரூ.5,4,73.54 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.4,716 கோடியாக இருந்தது.
வங்கியின் மொத்த வாராக்கடன் 0.94 சதவீதத்தில் இருந்து 1.16 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. அதேபோல நிகர வாராக்கடன் 0.39 சதவீதத்தில் இருந்து 0.46 சதவீதமாக அதிகரித்திருக் கிறது.
வங்கியின் நிர்வாக இயக்குநர் ரமேஷ் சோப்தி கூறும் போது, வங்கி சீரான வளர்ச்சியை அடைந்து வருகிறது. மொத்த வருமானம், நிகர லாபம், கடன் வளர்ச்சி விகிதம் என அனைத்து வகைகளிலும் வளர்ச்சி இருப்பதாக தெரிவித்தார். வங்கியின் நிகர வட்டி வரம்பு 3.99 சதவீதமாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் 4 சதவீதமாக இருந்தது. நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் 1.95 சதவீதம் அளவுக்கு இந்த பங்கு சரிந்து முடிந்தது.