

தஞ்சாவூர்: வருமான வரி செலுத்துவோர் அளித்த தகவல் தவறானது என்பது தெரியவந்தால், 10 ஆண்டுகள் கழித்து கூட அபராதம் விதிக்கவும், சிபிஐ விசாரணை மேற்கொள்ளவும் சட்டத்தில் வழிவகை உள்ளது என தஞ்சாவூரில் நடைபெற்ற விழிப்புணர்வு கூட்டத்தில் வருமான வரித் துறை கூடுதல் ஆணையர் தெரிவித்தார்.
வருமான வரியை முன்கூட்டியே செலுத்துவது தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் தஞ்சாவூரில் நேற்று நடைபெற்றது. இதில், வருமான வரித்துறை கூடுதல் ஆணையர் து.நித்யா தலைமை வகித்து பேசியது: வருமான வரியை முன்கூட்டியே செலுத்த விரும்பினால் செலுத்தலாம். வரித் தொகை எவ்வளவு இருக்கும் என்பதைக் கணிக்க முடியாவிட்டாலும், அதில் 90 சதவீதத்தை செலுத்தலாம். மொத்தமாக செலுத்துவதற்கு சிரமம் ஏற்பட்டால், ஜூன் 15, செப்.15, டிச.15, மார்ச் 15 என 4 தவணைகளில் செலுத்தலாம்.
உலக அளவில் பொருளாதார வளர்ச்சியில் நம் நாடு 4-ம் இடத்துக்கு முன்னேறிவிட்டதாக பேசுகிறோம். ஆனால், பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ள அளவுக்கு, வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. நம்முடைய வருவாயில் மற்ற செலவுகளுக்கு ஒதுக்கீடு செய்வதைப் போன்று, வருமான வரிக்கும் ஒதுக்கீடு செய்ய வேண்டும். நம் நாட்டில் பாதுகாப்பாக வியாபாரம் மேற்கொள்ளக் கூடிய சூழ்நிலையை அரசு உருவாக்குகிறது. அதேபோல, அரசின் கருவூலத்துக்கான நமது பங்களிப்பை கட்டாயம் வழங்க வேண்டும்.
மேலும், ஒவ்வொருவருடைய பணப் பரிவர்த்தனையும் கண்காணிக்கப்படுகிறது. எனவே, வருமான வரியைத் தாக்கல் செய்யும்போது, சரியான தகவலை குறிப்பிட வேண்டும். கடந்த 3 ஆண்டுகளாக தவறான தகவல்களை அளித்து, பலர் செலுத்திய வரித் தொகையைத் திரும்பப் பெற்றுள்ளனர். குறிப்பாக, இந்த மண்டலத்தில் இதுபோன்ற மோசடி அதிகமாக இருப்பதால், வருமான வரி வசூல் எதிர்மறையாக உள்ளது. இதேபோல, வரி செலுத்துவோர் அளித்த தகவல் தவறானது என்பது தெரிந்தால், 10 ஆண்டுகள் கழித்து கூட அபராதம் விதிக்கவும், சிபிஐ விசாரணை மேற்கொள்ளவும் சட்டத்தில் வழிவகை உள்ளது.
எனவே, ஆடிட்டர்கள் தங்களை தேடி வருபவர்களிடம் சரியான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். வருமானத்துக்கு உரிய நியாயமான வரியை சரியான நேரத்தில் செலுத்தினால் போதும். கூடுதலாகவோ, குறைவாகவோ நீங்கள் செலுத்த வேண்டியதில்லை. வருமான வரியை நாட்டின் வளர்ச்சிக்காகவும், வருங்கால சந்ததியினருக்காகவும் செலுத்துகிறோம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில், துணை ஆணையர் எஸ்.சீனிவாசன், வருமான வரி அதிகாரிகள் இரா.வில்விஜயன், மஞ்சுளா, பட்டய கணக்காளர் குகனேஸ்வரன், அகில இந்திய வரி செலுத்துபவர் பிராக்டிஸ்னர் சங்கத் தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் வியாபாரிகள் பங்கேற்றனர்.