மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி கோவையில் டிச.12-ல் மனித சங்கிலி போராட்டம்
கோவை: மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி கோவையில் வரும் 12-ல் மனித சங்கிலி போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர்கள் ஜே.ஜேம்ஸ், ஜெயபால் ஆகியோர் கோவையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: மின் கட்டண உயர்வை அமல்படுத்தும் முன்பும், அமல்படுத்திய பின்பும் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான சங்கங்கள் கடந்த ஜூன் 2022 முதல் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி தனித் தனியாகவும், சிறு குழுக்களாகவும் முயற்சி செய்தோம். அரசு சார்பாக கட்டணம் குறைப்பதாக பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன.
மின் கட்டணத்துடன் மின்வாரியம் 30-க்கும் மேற்பட்ட பிரிவுகளில் கட்டணத்தை மறைமுகமாக உயர்த்தி உள்ளது. இதில் தமிழக தொழில் அமைப்புகள் 5 கோரிக்கைகளை மட்டும் முன்னெடுத்து முதல்வரை வலியுறுத்தி வருகிறோம். எங்களின் 5 பிரதான கோரிக்கைகள் கூட முழுமையாக நிறைவேறாததால் தான் நாங்கள் தொடர்ந்து போராடுகிறோம்.
இந்நிலையில், தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு, கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு ( போசியா ), ஜவுளி மறுசுழற்சி கூட்டமைப்பு ( ஆர்டிஎஃப் ) ஆகியவை இணைந்து வரும் 12-ம் தேதி மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி முதல்வரின் கவனத்தை ஈர்க்க மனிதச் சங்கிலி போராட்டத்தை நடத்த உள்ளோம்.
அன்றைய தினம் மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து நஞ்சப்பா சாலை, கிராஸ் கட் சாலையில் தொழில் அமைப்புகளின் சார்பில் தொழிலாளர்களுடன் இணைந்து போராட்டம் நடைபெறும். மேலும் இந்த போராட்டத்துக்கு அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் ஆதரவை கேட்பது என முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
