4 மாநில தேர்தல் முடிவு எதிரொலி: சென்செக்ஸ் 1,383 புள்ளிகள் உயர்வு

4 மாநில தேர்தல் முடிவு எதிரொலி: சென்செக்ஸ் 1,383 புள்ளிகள் உயர்வு
Updated on
1 min read

மும்பை: நான்கு மாநில சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் வெளிவந்தன. இதையடுத்து நேற்றைய தினம் பங்குச் சந்தை பெரும் ஏற்றம் கண்டது.

சென்செக்ஸ் 1,383.93 புள்ளிகள் உயர்ந்து 68,865 ஆகவும் நிஃப்டி 418.9 புள்ளிகள் உயர்ந்து 20,686 ஆகவும் நிலைகொண்டன. சதவீதஅளவில் சென்செக்ஸ் 2.05%, நிஃப்டி 2.07% ஏற்றம் கண்டன.மும்பைப் பங்குச் சந்தையில் பட்டியலாகியுள்ள நிறுவனங்களின் மொத்த மதிப்பு ரூ.343.45 லட்சம்கோடியாக உயர்ந்தது. முதலீட்டாளர்களுக்கு நேற்று மட்டும் ரூ.5.77 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

கடந்த டிச.3-ம் தேதி ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய 4 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவு வெளியானது. இதில், தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. மற்ற 3 மாநிலங்களிலும் பாஜக வெற்றிபெற்று ஆட்சி அமைக்கிறது.

தேர்தல் முடிவுகள் வெளியானதையடுத்து நேற்றைய தினம் பங்குச் சந்தை வர்த்தகம் ஏற்றத்தில் இருந்தது. நிதி சேவை, எரிபொருள் துறையைச் சார்ந்தநிறுவனங்களின் பங்குகள் புதிய உச்சம் கண்டன. அதிகபட்சமாக எய்ஷர் மோட்டார்ஸ் நிறுவனத்தின் பங்கு 7.43% உயர்வு கண்டது. அதானி எண்டர்பிரைசஸ் 7.13%, அதானி போர்ட்ஸ் 6.14%, பிபிசிஎல்5.34%, ஐசிஐசிஐ வங்கி 4.70%, எஸ்பிஐ 4.01%, கோடாக் மஹிந்திரா 3.89%, ஓஎன்ஜிசி 3.86% என்ற அளவில் ஏற்றம் கண்டன.

2007-ல் இந்தியப் பங்குச் சந்தைநிறுவனங்களின் மதிப்பு 1 டிரில்லியன் டாலராக இருந்தது. 2017-ம்ஆண்டில் 2 டிரில்லியன் டாலராகவும் 2021-ல் 3 டிரில்லியன் டாலராகவும் உயர்ந்தது.

இந்நிலையில், கடந்த வாரம்மும்பைப் பங்குச் சந்தையில் பட்டியலாகியுள்ள நிறுவனங்களின் மதிப்பு முதன்முறையாக 4 டிரில்லியன் டாலரைக் கடந்து புதிய உச்சம்தொட்டது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in