Last Updated : 26 Jan, 2018 01:00 PM

 

Published : 26 Jan 2018 01:00 PM
Last Updated : 26 Jan 2018 01:00 PM

வணிக நூலகம்: விதி விலக்கான நிறுவனங்களும் அவைகளின் எண்ண ஓட்டமும்

வணிக நூல்கள் பெரும்பாலும் அறிவுரைகளை அள்ளித் தரும். சிறந்த குழுவை கட்டமைப்பது பற்றி நூற்றியோரு கொள்கைகளை எடுத்து கூறும். சந்தைப்படுத்துதலைப் பற்றி பத்து கட்டளைகளை உத்திகளாகக் கூறும். நிறைய புத்தகங்கள் எதைச் செய்தால் எதைப் பெறலாம் என்ற வேக வளர்ச்சிக்கும் உடனடி தீர்வுகளுக்கும் வழிகாட்டும். பெரும்பாலும் அறிவுபூர்வமான செயல் விளக்கங்கள் எரிமலையாய் பொங்கிப் பெருகும். அதைப் போன்ற பெரும்பான்மையான எண்ணக் குவியல்கள் தலைப்புகளாக செருகுவதற்கும் தலைப்புகளாக ஏற்றுக் கொள்வதற்கும் ஆய்வு முடிவு இல்லாத அறிவுச் சுரங்கங்களாக இருக்க வாய்ப்புகள் அதிகம். ஆனால், RAYNOR மற்றும் AHMED என்ற நூல் ஆசிரியர்கள் ஏராளமான ஆய்வை, தாராளமாக செய்து எளிய உண்மைகளை ஆய்வு முடிவுகளாகக் கூறியிருக்கிறார்கள். 25,000 நிறுவனங்களில் இருந்து 344 நிறுவனங்களை 4-5 ஆண்டுகால அளவில் விதிவிலக்கான நிறுவனங்களைக் கண்டறிந்து, அவைகளைப் பற்றி மூன்றே மூன்று விதிகளை மட்டுமே எடுத்துக் கூறியிருக்கிறார்கள்.

ஐந்து ஆண்டு கால ஆய்வில் மூன்று உண்மைகளை கூறியிருப்பது சாதாரணமாகத் தோன்றும் ஆனால் அவை அனைத்தும் சரியான முறையிலும் ஆய்வு முடிவுகளை இணைத்தும் எழுதப்பட்டவை என்பது இந்த புத்தகத்திற்கு வலு சேர்க்கிறது.

1. தரமே தலையாயது

2. வருமானம் மற்றும் செலவு

3. மேலே கூறிய இரண்டும் இணைந்தது

தரமே தலையாயது

பங்களிப்பும் செயல்பாடும் நிறுவனத்தை நிலைநிறுத்துகிறது. போட்டியாளர்களிடமிருந்து தங்களைத் தனிப்படுத்திக் காட்டுவதற்கு விலையில் மட்டும் மாற்றம் செய்தால் நிலைத்த வெற்றியாக இருக்காது. விலை சாராத, பொருள்களின் தன்மை சார்ந்த தகுதி மற்றும் தரம் கூட்டப்பட்ட பொருட்களுக்கு சந்தையில் என்றும் இடம் உண்டு. நுகர்வோர் விரும்பி வாங்குவார்கள். போட்டியாளர்களோடு விலையில் மட்டும் போட்டி போட்டால் குறுகிய கால அளவில் பொருள் காணாமல் போவதுடன் நிறுவனமும் தொலைந்து போகும். பொதுவாக வெகுஜன வாதமாக விலையைப் பற்றி மட்டுமே எல்லாரும் பேசிக்கொண்டிருப்பார்கள் ஆனால் அறிவுசார் நிகழ்வுகளால் ஒரு கால இடைவெளிக்கு பிறகு விலையை மறந்துவிட்டு பொருளைப் பற்றி பேச ஆரம்பிப்பார்கள்.

ஆரம்ப கால நுகர்வோர்கள் பொருளாதாரத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருப்பதால் விலையை வேதமாக எடுத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் தொடர்ந்த பயன்பாட்டிலும் பொருளாதார மேம்பாட்டிலும் விலை மறைந்து பொருளும் தரமும் முன் நிற்கும். எனவே குறுகிய கால அளவில் யார் ஒருவர் சந்தையில் விலையை மட்டுமே உத்தியாக கொண்டு இருக்காமல் தரத்தையும் பொருளையும் முக்கிய காரணிகளாக கருதுகிறார்களோ அவர்களுக்கு வெற்றி நிச்சயம்.

ஆய்வு மேற்கொண்ட அனைத்து நிறுவனங்களும் இதையே கூறுகின்றன. நாடுகள் பொருளாதார அமைப்பு வாங்கும் திறன் பலமை வாதங்கள் போன்றவை ஒன்றுக்கொன்று முரண் பட்டுக் கொண்டிருந்தாலும் காலப் போக்கில் உலக மயமாக்கலின் விளைவாக தரமான பொருட்கள் உலகம் முழுவதும் உள்ள சந்தையில் விலையைப் பற்றி கவலையில்லாமல் போட்டி போட்டுக்கொண்டு வெற்றியடைவதைக் கண்கூடாகக் காண்கின்றோம்.

வருமானம் மற்றும் செலவு

மேல் அதிக லாபம் என்பது அதிக வருமானத்திலும் குறைந்த செலவிலும் இருக்கக்கூடிய வித்தியாசம் என்பது அனைவரும் அறிந்ததே. வருமானத்தை அதிகரிப்பது என்பது ஆகக் கூடிய செலவுகளை குறைத்தலும், புதிய முறைகளை பயன்பாட்டில் கொண்டுவருவதும் ஆகும். ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நூற்றுக்கணக்கான நிறுவனங்களில் குறிப்பிட்ட நிறுவனங்கள் வருமானத்தை அதிகரிப்பதற்காக செலவு வகைகளைக் குறைத்தார்களே தவிர, கொள்முதல் விலையை கூட்டவும் அதிகபட்ச விலை நிர்ணயமும் செய்ய வில்லை. வருமானமும் செலவும் தலைகீழ் விகிதம் என்பது அறிந்ததே. அதிக வருமானம் என்பது பொருட்களின் தரத்திலும் நீண்டகால உபயோகத்திலும், மதிப்புகூட்டுதலிலும் அடங்கும். குறைந்த விலையோ அடித்து நொறுக்கப்பட்ட அதிரடிவிலையோ நீண்ட கால வருமானத்திற்கு வழிகோலாது.

எந்த ஒரு பொருளை விலை குறைவாக வாங்கிப் பழக்கப்படுத்திக் கொள்கிறார்களோ அதன் பிறகு உற்பத்தி செலவீனங்கள் காரணமாக குறைந்த அளவு விலையேற்றம் கூட பொருட்களை சந்தையில் இருந்தும் நுகர்வோர் மனதில் இருந்தும் தூக்கி எறிந்துவிடும்.

நீண்டகாலமாக நிலைந்து நின்ற நிறுவனங்கள் பொருட்களின் விலைக்கு காரணத்தை தெளிவாக குறிப்பிட்டிருந்தார்கள். மேலும் குறுகிய வட்டத்திற்குள் அல்லாமல் பொருட்களை வேறுபட்ட மாறுபட்ட வித்தியாசமான சந்தைகளுக்கும் எடுத்துச் சென்றார்கள். அதிக விற்பனை அதிக வருமானத்தை ஈட்டியது. அதிக உற்பத்தி திறமையான உத்திகள் மூலம் செலவீனங்களை குறைத்தது. இன்றைக்கும் உலக மயமாக்கலின் விளைவாக பல பன்னாட்டுப் பொருட்கள் விலை சற்று கூடுதலாக தோற்றமளிப்பதைப் போலத் தோன்றினாலும் நுகர்வோர் விரும்பி வாங்கும் காரணம் அந்த நிறுவனங்கள் பொருட்களை தனித்துவப் படுத்துவதே என்றால் மிகையாகாது. பெரு வெற்றி பெறுவதற்கு குறுகிய மற்றும் குறுக்கு வழிகள் கிடையாது. வியாபாரப் போட்டிகள் விலையை அடித்தளமாக இல்லாமல் குறைந்த செலவீனங்கள் மூலம் அதிக லாபம் ஈட்டும் உத்தியை மேலே கண்டோம் அதனுடைய தொடர்ச்சியாக தான் இந்த உத்தியும் இருப்பதாக நூலாசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள்.

வேறு விதிகளே இல்லை (மேலே கூறிய இரண்டும் இணைந்தது)

போட்டிகளும், சுற்றுச்சூழல் மாற்றங்களும் சவால்களும் இருக்கக்கூடிய எந்த சந்தையிலும் மேலே கூறிய இரண்டு உத்திகளையும் விட்டுவிடுதல் கூடாது. அனைத்தும் கைக்கெட்டும் துரத்தில் கிடைக்கும். ஆனால், அருகில் உள்ளவைகளை பார்த்துக் கொண்டே தொலைவில் உள்ள பிரகாசமான வெற்றியை இழந்தவர்கள் அதிகம். வியாபாரத்தைப் பொறுத்தவரை எந்த எந்த மாற்றங்கள் தேவையோ அதை ஏற்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.

சந்தைப்படுத்துதலில் புதிய உத்திகள் தேவை. விலை மட்டுமே வேதமாகக் கொள்ளக் கூடாது. தொழில் நுட்ப மேம்பாட்டை விளக்கி விவரித்துக் கூறுதல் அத்தியாவசியம். தொழில்நுட்ப மேம்பாடு பொருட்களின் தர வித்தியாசத்தை வெளிப்படுத்தும். நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களும் மாற்றப்பட வேண்டும். தேவை ஏற்படும் பொழுது மாற்றங்கள் வெற்றியை மட்டுமே தரும்.

எந்தத் துறையாக இருந்தாலும் எந்தப் பொருளாக இருந்தாலும் மாற்றம் என்பது தவிர்க்க முடியாதது. அது போன்று மாற்றங்களைக் கொண்டு வரும் பொழுது மேம்பட்ட தரத்தையும், மலிவான பொருள் அல்லாததாக இருத்தலும் அவசியம். அதே போன்று வருமானத்தைக் காட்டிலும் செலவினங்கள் அதிகபட்சம் குறைவாக இருப்பது மேலதிக லாபம் பெறுவதற்கு வழிவகுக்கும்.

இதைப் படிக்கும் போது யாருக்கும் தெரியாத புதிய கருத்துகளை நூல் ஆசிரியர்கள் கூறியிருக்கிறார்களா என்ற நம்முடைய மேதாவிலாசத்தினால் கேள்விகள் தோன்றும். நுணுகி ஆய்வு மேற்கொண்டு கருத்துகளை எடுத்துக் கூறியிருக்கும் விதத்தில் இவை அனைத்தும் உண்மை என்றே அறியப்படும்.

rvenkatapathy@rediffmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x