தெற்கு ரயில்வேயில் சரக்கு போக்குவரத்து: 8 மாதங்களில் ரூ.2,319 கோடி வருவாய் ஈட்டி சாதனை

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: தெற்கு ரயில்வேயில் நடப்பு நிதியாண்டில் நவம்பர் வரை 8 மாதங்களில் சரக்கு போக்குவரத்து மூலமாக, ரூ.2,319 கோடி வருவாய் ஈட்டி சாதனை படைக்கப்பட்டுள்ளது. சரக்கு ரயில்களில் 26.08 மில்லியன் டன் பொருள்களை ஏற்றி அனுப்பியது மூலமாக இந்த வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வேயில் சென்னை, மதுரை, திருச்சிராப்பள்ளி, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம் உள்பட 6 கோட்டங்களில் சரக்கு ரயில் போக்குவரத்தை மேம்படுத்த கடந்த 3 ஆண்டுகளாக பல்வேறுநடவடிக்கைகளை ரயில்வே நிர்வாகம் எடுத்து வருகிறது. இதற்காக, தெற்கு ரயில்வேயின் 6ரயில்வே கோட்டங்களில் வணிகமேம்பாட்டு குழு உருவாக்கப்பட்டது. இக்குழுக்கள், சரக்கு போக்குவரத்தை மேற்கொள்ள பெரு நிறுவனங்களிடம் தொடர்புகொள்வது, சரக்கு கையாள்வதற்கு புதிய ரயில் நிலையங்களை ஏற்படுத்தல், புதிய நவீன சரக்கு ரயில் உருவாக்குதல் உள்பட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றனர். இதன்விளைவாக, ரயில்வே சரக்கு போக்குவரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. கடந்த 2022-23-ம் நிதியாண்டில், சரக்கு போக்குவரத்து பிரிவில் 37.94 மில்லியன் டன் சரக்குகள் ஏற்றிச்சென்று சேர்க்கப்பட்டன. இதன்மூலமாக, ரூ.3,637 கோடி வருவாய் கிடைத்தது.

இந்நிலையில், நடப்பு நிதியாண்டில் (2023-24-ம் நிதியாண்டில்) நவம்பர் வரை 8 மாதங்களில் ரூ.2,319 கோடி வருவாய் ஈட்டி தெற்கு ரயில்வே சாதனை படைத்துள்ளது. மேலும், இது கடந்த 2022-23 நிதியாண்டின் இதே காலகட்டத்தின் வருவாயைவிட ரூ.16.52 கோடி அதிகமாகும்.

இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: தெற்கு ரயில்வேயில் கூடுதல் சரக்குகளை கையாளுவது, பார்சல் ரயில்களை இயக்குவது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்பயனாக சரக்கு ரயில் போக்குவரத்து பிரிவில் ஆண்டுதோறும் சராசரியாக 20 சதவீதம் வரையில் வருவாய் அதிகரித்து வருகிறது. நிலக்கரி, உரம், சிமெண்ட், இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களையும் அதிகளவில் அனுப்பி வைத்து அதன் வாயிலாக வருவாய் ஈட்டப்படுகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in