

திருவள்ளூர்: தமிழ்நாடு அரசு, ஜன. 7, 8-ம் தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை சென்னையில் நடத்த திட்டமிட்டுள்ளது.
இம்மாநாட்டை முன்னிட்டு, திருவள்ளூர் மாவட்ட அளவிலான தொழில் முதலீடுகள் மாநாடு நேற்று திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் நடைபெற்றது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மற்றும் மாவட்ட தொழில் மையம் சார்பில் நடைபெற்ற இம்மாநாட்டில், கைத் தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
இம்மாநாட்டில், அமைச்சர் ஆர்.காந்தி தலைமையிலும், மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் முன்னிலையிலும் 20 தொழில் நிறுவனங்கள் சார்பில் 3,912 பேருக்கு வேலை வாய்ப்பளிக்கும் வகையில் ரூ.822.83 கோடி மதிப்பில் முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
இந்நிகழ்வில் மாவட்ட கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி), மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் சுகபுத்ரா, மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் சேகர் பங்கேற்றனர்.