

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கிளைகள் விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ளன. விழுப்புரம் தலைமையக கிளை, அனந்தபுரம், அவலூர்பேட்டை, சின்னசேலம், செஞ்சி, கச்சிராய பாளையம், கள்ளக்குறிச்சி, கண்டமங்கலம், மணலூர் பேட்டை, மரக்காணம், முங்கில்துறைப்பட்டு, பெரியசெவலை,சங்கராபுரம், தியாகதுருகம், திண்டிவனம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, வளவனூர், வானூர், விக்கிரவாண்டி, விழுப்புரம் நகரம், கூட்டேரிப்பட்டு, திருவக்கரை, வல்லம் (நாட்டார்மங்கலம்), கண்டாச்சிபுரம், கோட்டக்குப்பம், பகண்டை கூட்டுரோடு, வெள்ளிமேடுபேட்டை, காணை ஆகிய 29 இடங்களில் இந்த வங்கியின் கிளைகள் உள்ளன.
கூட்டுறவு சட்ட விதிகளின் கீழ், இந்த வங்கியின் இணை உறுப்பினர்களாக பொது மக்களை பதிவு செய்து நகைக் கடன் வழங்கப்பட்டு வருகிறது. தனி நபர் கடன், வியாபார கடன், விவசாய கடன் வழங்கப்பட்டு வருகிறது. மத்திய கூட்டுறவு வங்கியின் உறுப்பினர்களாக தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், ஊரக வளர்ச்சி வங்கிகள், வேளாண் உற்பத்தியாளர்கள் சங்கங்கள், வீட்டு வசதி சங்கங்கள், பணியாளர் கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட சங்கங்களுக்கு நிதியுதவி அளிக்கப்பட்டு, அவைகளின் வழியாக கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
கடன் வழங்குவதில் சிறப்பான சேவை இருந்தாலும் பணம் எடுப்பதில் சில சிக்கல்கள் இருப்பதாக வாடிக்கையாளர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் உள்ள விழுப்புரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் அதன் கிளைகள் அனைத்தும் ‘கோர் பேங்கிங்’ சிஸ்டத்தில் இயங்கி வருகிறது. அதனால், ‘இந்த வங்கியின் எந்த ஒரு கிளையில் கணக்கு வைத்திருக்கும் ஒரு வாடிக்கையாளர் மற்ற எந்த ஒரு கிளை மூலமும் பணம் செலுத்த முடியும்; பணத்தை எடுக்க முடியும்’ என்று அறிவிக்கப்பட்டது. பொதுவான அனைத்து தேசிய உடமையாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளில் தற்போது இந்த நடைமுறையே உள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கியின் ஏதாவது ஒரு கிளையில் உறுப்பினராக உள்ள ஒருவர், அதே வங்கியின் மற்றொரு கிளையில் தன் வங்கிக்கணக்குக்கோ அல்லது வேறு ஒருவரின் வங்கி கணக்குக்கோ ‘கோர் பேங்கிங்’ முறைப்படி பணம் செலுத்த அனுமதிக்கப்படுகிறது. ஆனால் பணம் எடுக்க வேண்டுமென்றால் கணக்கு வைத்துள்ள வங்கியின் கிளைக்குதான் செல்ல வேண்டும் என்று நிர்பந்திக்கின்றனர். இதனால் வாடிக்கையாளர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இதுபற்றி கேட்டால், “வேண்டுமென்றால் ஏடிஎம் கார்டு மூலம் எடுத்துக் கொள்ளுங்கள்” என்று வங்கி ஊழியர்கள் தங்களை அலைக்கழிப்பதாக வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர். ஏடிஎம் கார்டில் நாளொன்றுக்கு ரூ. 25 ஆயிரம் மட்டுமே எடுக்க முடியும் என தெரிந்தும் வங்கி ஊழியர்கள் இப்படி கூறுகின்றனர் என்றும் அவர்கள் தெரிக்கின்றனர்.
இது குறித்து வங்கியின் மேலாண்மை இயக்குநர் இளஞ்செல்வியிடம் கேட்டபோது, “ஊழியர்களிடம் இது குறித்து கடுமையாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. இனி வருங்காலங்களில் பணம் எடுக்க அனுமதிப்பது இல்லை என்று வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது” என்றார். நகைக் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்களுக்காக ஊரக பகுதிகளில் உள்ளவர்கள் கூட்டுறவு வங்கிகளை சார்ந்தே இருக்கின்றனர். அவர்கள் பிற வங்கிகளில் தங்கள் சேவைகளைத் தொடர்ந்தாலும் இதன் அவசர அவசியத்தை நன்கே உணர்ந்து, அதில் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்களின் வசதிக்காக, வங்கியால் வரையறுக்கப்பட்ட விதத்தில், ‘கோர் பேங்கிங்’ முறையை முறையாக செயல்படுத்த வேண்டும். இந்த எளிய வசதியை செயல்படுத்தாமல், விரைவில் பிற வங்கிகளைப் போல் ‘நெட் பேங்கிங்’, ‘மொபைல் பேங்கிங்’ எல்லாம் கொண்டு வருவோம் என்று சொல்லிக் கொண்டிருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை.