

கோவை: ஜவளித் தொழில் வளர்ச்சிக்கு உதவும் வகையில் தமிழக அரசு அறிவித்துள்ள சிறிய ஜவுளிப் பூங்கா திட்டம் நூற்பாலைகளுக்கு பயன் தராது என்றும், இதுபோன்ற புதிய திட்டங்களுக்கு செலவிடும் தொகையை ஏற்கெனவே பல்வேறு சிரமத்தில் உள்ள தொழில்துறையினரை காப்பாற்ற உதவ வேண்டும் என, தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர். ஜவுளித்துறையில் முன்னோடி மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு விளங்குகிறது. இத்துறையின் கட்டமைப்பை வலுப்படுத்த அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின்கீழ் குறைந்தபட்சம் 2.5 ஏக்கர் நிலப்பரப்பில் 3 ஜவுளி உற்பத்தி தொழிற்கூடங்கள் அமைக்கப்பட வேண்டும். தகுதிவாய்ந்த திட்ட மதிப்பில் (பொது உள்கட்டமைப்பு வசதிகள், பொதுப் பயன்பாட்டுக்கான கட்டிடங்கள்) 50 சதவீதம் அல்லது ரூ.2.50 கோடி இவற்றில் எது குறைவானதோ அது தமிழ்நாடு அரசின் மானியமாக வழங்கப்படும். தகுதி வாய்ந்த திட்ட மதிப்பீட்டில், ஜவுளித் தொழிற்கூடங்கள் அமைப்பதற்கான கட்டிடங்களையும் சேர்த்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கோவை மாவட்ட தொழில் வளர்ச்சியில் சிறிய அளவிலான ஜவுளிப் பூங்காக்கள் அமைப்பதன் மூலம் நடுத்தர நிறுவனங்களில் வளர்ச்சி ஏற்பட்டு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு பெருகுவதோடு, அதிகளவில் அன்னியச் செலாவணி ஈட்டுவதற்கு வாய்ப்புகள் ஏற்படும் என அரசு சார்பில் கூறப்பட்டு வரும் நிலையில், அரசின் இத்திட்டம் நூற்பாலைகளுக்கு பயன் தராது என தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சவுத் இந்தியா ஸ்பின்னர்ஸ் சங்கத்தின்(சிஸ்பா) கவுரவ செயலாளர் ஜெகதீஷ் சந்திரன் கூறும்போது, “தமிழக அரசு அறிவித்துள்ள திட்டம் நூற்பாலைகளுக்கு பயன் தராது. ஒரு நூற்பாலை அமைக்க குறைந்தபட்சம் 2 ஏக்கர் நிலம் தேவைப்படும். இத்தகைய சூழ்நிலையில் தமிழக அரசின் திட்டத்தில் 2.5 ஏக்கர் நிலப்பரப்பில் 3 நூற்பாலைகள் அமைக்க வேண்டும் என்பது நடைமுறையில் சாத்தியமல்ல. எனவே, நூற்பாலைகளை தவிர்த்து வீவிங் உள்ளிட்ட ஜவுளி சங்கிலித்தொடரிலுள்ள மற்ற தொழில் நிறுவனங்கள் தான் இத்திட்டத்தில் பயன்பெற வாய்ப்பு உள்ளது.
கோவையில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் சமீபத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்திலும் இதுகுறித்து தெரிவித்துள்ளோம். அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்” என்றார். மறுசுழற்சி ஜவுளித்தொழில் கூட்டமைப்பின்(ஆர்டிஎப்) தலைவர் ஜெயபால் கூறும்போது, “தமிழகத்தில் உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டணத்தால் எம்எஸ்எம்இ தொழில்துறையினர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜவுளித்தொழில் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. நிலைக் கட்டணம் 430 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது, உச்ச பயன்பாட்டு நேர மின் கட்டணம் எம்எஸ்எம்இ பிரிவினருக்கு முதல் முறையாக அமல்படுத்தியுள்ளது உள்ளிட்டவை ஏற்புடையதல்ல.
மற்ற மாநிலங்களில் பல்வேறு விதமான மானியங்கள் வழங்கப்படுகின்றன. தமிழகத்தில் ஏற்கெனவே நூற்பாலைகள் உற்பத்தி செய்துள்ள நூலை வாங்க ஆளில்லை. இத்தகைய சூழ்நிலையில் மினி ஜவுளிப்பூங்கா திட்டம் என அறிவித்து மானியம் வழங்கப்படும் என அறிவிப்பது வேடிக்கையாக உள்ளது. இதுபோன்ற புதிய திட்டங்களுக்கு செலவிடும் தொகையை ஏற்கெனவே பல்வேறு சிரமத்தில் உள்ள தொழில்துறையினரை காப்பாற்ற உதவ வேண்டும். தொழில்துறையினரை அரசு ஊக்குவிக்க வேண்டும். மாறாக, மின் கட்டண உயர்வு போன்ற நெருக்கடியை ஏற்படுத்தக்கூடாது” என்றார்.