Published : 26 Nov 2023 04:12 AM
Last Updated : 26 Nov 2023 04:12 AM
தருமபுரி: தீபத் திருவிழாவையொட்டி தருமபுரியில் நேற்று மலர்களின் விலை உயர்ந்து காணப்பட்டது.
தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி அடுத்த மொடக்கேரி, வெள்ளோலை, லளிகம், பாலக்கோடு, காரிமங்கலம், மாரண்ட அள்ளி, பாப்பாரப்பட்டி, பென்னாகரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் சாமந்தி, அரளி, மல்லி, செண்டுமல்லி, சம்பங்கி, மாலைரோஜா, பட்டன் ரோஜா உள்ளிட்ட மலர்களை சாகுபடி செய்து வருகின்றனர்.
இங்கு அறுவடையாகும் மலர்களை தருமபுரி நகர பேருந்து நிலைய வளாகத்தில் இயங்கும் மலர் சந்தைக்கு கொண்டு வந்து விவசாயிகள் விற்றுச் செல்கின்றனர். வெளியூர் வியாபாரிகள் தேவைக்கு ஏற்ப பூக்களை வாங்கிச் செல்கின்றனர். கடந்த சில நாட்களாக சாமந்திப் பூ கிலோ ரூ.30 முதல் ரூ.50 வரை விற்பனையாகி வந்தது. ஊசி மல்லி எனப்படும் சன்ன மல்லி கிலோ ரூ.600 வரையும், கனகாம்பரம் மற்றும் குண்டுமல்லி ரூ.800 வரையும் விற்பனையானது. இந்நிலையில், கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி நேற்று மலர்களின் விலை அதிகரித்தது.
சாமந்திப் பூ நேற்று கிலோ ரூ.80 முதல் ரூ.150 வரை விற்பனையானது. சன்னமல்லி கிலோ ரூ.800-க்கும், கனகாம்பரம், குண்டு மல்லி கிலோ ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. விழாக்கால தேவையையொட்டி பூக்களின் விலை அதிகரித்ததால் மலர் உற்பத்தியாளர்கள் உற்சாகம் அடைந்தனர். அதே நேரம், பூக்கள் வாங்க வந்த சில்லறை நுகர்வோர் இந்த திடீர் விலை உயர்வால் ஏமாற்றம் அடைந்தனர். விழாக்கால தேவையை யொட்டி பூக்களின் விலை அதிகரித்ததால் மலர் உற்பத்தியாளர்கள் உற்சாகம் அடைந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT