கோவை, திருப்பூரில் தொடரும் ‘10 ரூபாய் நாணய’ பிரச்சினை - தீர்வுதான் என்ன?

கோவை, திருப்பூரில் தொடரும் ‘10 ரூபாய் நாணய’ பிரச்சினை - தீர்வுதான் என்ன?
Updated on
1 min read

திருப்பூர்: நடப்பு மாத முதல் வாரத்தில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணுசந்திரன் ஓர் அறிக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அதில் ‘இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட 10 ரூபாய் நாணயங்களை வாங்க பல கடைகளில் மறுக்கப்படுகிறது. இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட நாணயங்களை வாங்க ஒருவர் மறுத்தால், இந்திய தண்டனை சட்டம் 124-ன் படி குற்றம். இதற்கு குறைந்த பட்சம் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை, அபராதம் விதிக்கப்படும். 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பவர்கள் மீது பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பல ஆண்டுகளாக 10 ரூபாய் நாணயங்களை தேநீர், மளிகை உட்பட பல்வேறு கடைகளில் வாங்க மறுப்பதால், பொதுமக்கள் அதிருப்திக்குள்ளாகி வருகின்றனர். இந்திய ரிசர்வ் வங்கி 10 ரூபாய் நாணயத்தை 2005-ம் ஆண்டு வெளியிட்டது முதல் நாணயம் புழக்கத்தில் இருந்து வருகிறது. இதுவரை ரிசர்வ் வங்கி 14 வகையான ரூ.10 நாணயங்களை வெளியிட்டுள்ளது. ஒவ்வொன்றும், மற்றொன்றில் இருந்து மாறுபட்டவை. இதனால் பயன்படுத்தும் மக்களிடையே குழப்பம் ஏற்பட்டதாக சிலர் கூறுகின்றனர்.

இந்த நாணயங்களை நாள்தோறும் பயன்படுத்தும் கோவை, திருப்பூர் மாவட்ட அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் கூறும்போது, “திருப்பூர், கோவை மாவட்டங்களில் 10 ரூபாய் நாணயங்களை கொடுத்தால் பொதுமக்கள் வாங்குவதில்லை. 10 ஆண்களில் ஓரிருவர் பெற்றுக்கொள்வார்கள். அதேசமயம் பெண்கள் என்றால் 10 பெண்களில் 10 பேருமே நிராகரிக்கிறார்கள். அந்தளவுக்கு 10 ரூபாய் நாணயங்கள் செல்லாதவை என அவர்களின் மனதில் ஆழமாக பதிந்துவிட்டது. தீபாவளி பண்டிகையின்போது, திண்டுக்கல், தேனி, மதுரை மற்றும் திருநெல்வேலி பகுதிகளுக்கு பேருந்துகளை ஓட்டினோம்.

அங்கெல்லாம் 10 ரூபாய் நாணயங்களை எந்தவித தயக்கம், மறுப்பின்றி இன்முகத்துடன் பெற்றுக்கொண்டனர். அங்கு 10 ரூபாய் நாணயம் புழக்கத்தில் எவ்வித தடங்கலும் இல்லை. ஆனால், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சிறிய வணிக நிறுவனங்கள், தேநீர் கடைகளில்கூட நிராகரிப்பதால், பொதுமக்களும் வாங்க தயங்குகிறார்கள். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஏற்படுத்திய விழிப்புணர்வு நடவடிக்கை போல, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் மேற்கொண்டாலே பலரும் 10 ரூபாய் நாணயங்களை மகிழ்ச்சியுடன் வாங்க தொடங்கிவிடுவார்கள்.

பொது மக்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த, இந்திய ரிசர்வ் வங்கி பல்வேறு பிரச்சாரங்களை மேற்கண்ட மாவட்டங்களில் மேற்கொள்ள வேண்டும். இந்த நாணயம் தொடர்பான சந்தேகங்களை கேட்டுப்பெற, 14440 என்ற கட்டணமில்லா சேவையை ரிசர்வ் வங்கி வழங்கி வருகிறது. 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்று கூறுவதோ, பணப்பரிமாற்றத்தின்போது கொடுக்கவோ, வாங்கவோ மறுப்பது சட்டப்படி குற்றம் என்பதை அனைவருக்கும் உணர்த்த வேண்டும். சில இடங்களில் பெரும் வணிக நிறுவனங்களில்கூட வாங்க மறுப்பதால், மேற்குறிப்பிட்ட மாவட்டங்களில் பொதுமக்களிடையே தயக்கம் நிலவுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in