

சென்னை: ரெப்கோ வங்கியின் 55-வது நிறுவன தின விழாவில், 4 புதிய திட்டங்களை தமிழக அரசின் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் தொடங்கி வைத்தார். ரெப்கோ வங்கியின் 55-வது நிறுவன தின விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. விழாவில், வங்கியின் முதன்மை பொது மேலாளர் என்.பாலசுப்பிரமணியன் வரவேற்புரை ஆற்றினார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், ‘ரெப்கோ-55’ என்ற 8.75 சதவீதம் வரை வட்டியுடன் கூடிய புதிய வைப்புத் தொகை திட்டத்தையும், ரூ.3 கோடி வரை தொழில் கடன் வழங்கக் கூடிய ‘ரெப்கோ ஃபெளக்ஸி ஓடி’ என்ற திட்டத்தையும், தாயகம் திரும்பியோருக்கு குறைந்த வட்டியில் இருசக்கர வாகனம் வாங்க ரூ.1 லட்சம் வரையிலான கடன் திட்டம் மற்றும் வீடு சீரமைப்புக்கான சிறப்புக் கடன் திட்டம் ஆகிய 4 புதிய திட்டங்களை தொடங்கிவைத்தார்.
ரூ.1.42 கோடி ஈவுத் தொகை: பின்னர் அவர் பேசியதாவது: கடந்த 1969-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதி இந்த வங்கியை தொடங்கி வைத்தார். அவரது நூற்றாண்டு விழாவில் இந்த 55-வது நிறுவன தின விழாவை கொண்டாடுவது மகிழ்ச்சியாக உள்ளது. ரெப்கோ வங்கியில் தமிழக அரசு 4.68 சதவீத மூலதனத்தை கொண்டுள்ளது. கடந்த 2022-23 நிதியாண்டில் இந்த வங்கி ஈவுத் தொகையாக தமிழக அரசுக்கு ரூ.1.42 கோடி வழங்கி உள்ளது. நடப்பு நிதியாண்டில் தமிழகத்தில் 14 கிளைகளும், கேரளாவில் ஒரு கிளையும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 8 சதவீதம் வளர்ச்சி கண்ட இந்த வங்கி, நடப்பாண்டில் 9 சவீதமாக உயர்ந்து ரூ.19 ஆயிரம் கோடியை எட்டும். இதன்மூலம், ரூ.80 கோடி நிகர லாபம் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
52 ஆயிரம் பயனாளிகள்: பயனாளிகளின் எண்ணிக்கை 45 ஆயிரத்தில் இருந்து 52 ஆயிரமாக உயர்ந்துள்ளது வரவேற்கத்தக்கது. இவ்வங்கியில் மகளிர் அதிக அளவில் கடன் பெற்று பயனடைந்து வருகின்றனர். அவர்கள் கடன் பெறுவதோடு வங்கியில் டெபாசிட்டும் செய்ய வேண்டும். இவ்வாறு அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் பேசினார். ரெப்கோ மேலாண்மை இயக்குநர் ஆர்.எஸ்.இசபெல்லா பேசும்போது, ‘‘ரெப்கோ வங்கி கடந்த 1969-ம் ஆண்டு பர்மா, இலங்கையில் இருந்து தாயகம் திரும்பியவர்களின் மறுவாழ்வுக்கு உதவும் வகையில் மத்திய, மாநில அரசுகளின் உதவியுடன் தொடங்கப்பட்டது.
தென்மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் 108 கிளைகளை கொண்டு செயல்படும் ரெப்கோ வங்கியின் மொத்த வணிகம் ரூ.18,800 கோடியாக உள்ளது. இந்த நிதியாண்டின் இறுதிக்குள் ரூ.20 ஆயிரம் கோடி வர்த்தக இலக்கை எட்டும் வகையில் செயல்பட்டு வருகிறது’’ என்றார். விழாவில், ரெப்கோ வங்கி தலைவர் சந்தானம், அகதிகள் மறுவாழ்வு நல ஆணையர் ஜெசிந்தா லாசரஸ் மற்றும் ரெப்கோ வீட்டுக் கடன் நிறுவனத்தின் தலைவர் தங்கராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.