

தொடர்ந்து ஆறாவது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்தில் முடிவடைந்தன. வர்த்தகத்தின் முடிவில் சென்செக்ஸ் 310 புள்ளிகள் உயர்ந்து 26025 புள்ளியில் முடிவடைந்தது. அதேபோல நிப்டி 83 புள்ளிகள் உயர்ந்து 7767 புள்ளியில் முடிவடைந்தது.
சென்செக்ஸ் வர்த்தகத்தின் இடையே 26050 புள்ளியையும், நிப்டி வர்த்தகத்தின் இடையே 7773 புள்ளியையும் தொட்டது. கடந்த ஆறு வர்த்தக தினங்களில் சென்செக்ஸ் 3 சதவீதம் உயர்ந்திருக்கிறது. முக்கிய குறியீடுகள் உயர்ந்த அளவுக்கு மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகளில் ஏற்றம் இல்லை. சிஎன்எக்ஸ் மிட்கேப் குறியீடு 0.08 சதவீதம் உயர்ந்தும், பிஎஸ்இ ஸ்மால் கேப் குறியீடு 0.01 சதவீதம் சரிந்தும் முடிவடைந்தது.
கேபிடல் குட்ஸ் மற்றும் பவர் குறியீடு தவிர மற்ற அனைத்து குறியீடுகளும் உயர்ந்தே முடிவடைந்தது. குறிப்பாக டெக்னாலஜி, ஐடி, ஆயில் அண்ட் கேஸ் மற்றும் கஸ்யூமர் டியூரபிள் குறியீடு சந்தையின் ஏற்றத்துக்கு காரணமாக இருந்த்து.
சென்செக்ஸ் பங்குகளில் பார்தி ஏர்டெல் பங்கு அதிகபட்சமாக 4.81 சதவீதம் உயர்ந்தது. ரிலையன்ஸ் 3.35%, ஹெச்டிஎப்சி 2.93% டிசிஎஸ் 2.71% மற்றும் ஹிண்டால்கோ 2.62 சதவீதம் உயர்ந்து முடிவடைந்தது. மாறாக மாருதி பங்கு 1 சதவீதம் சரிந்தது. மேலும், எல் அண்ட் டி, எம் அண்ட் எம், பிஹெச்இஎல் மற்றும் ஆக்ஸிஸ் வங்கி ஆகிய பங்குகள் சரிந்து முடிவடைந்தன.
உலக சந்தை நிலவரம்
முக்கியமான ஆசிய சந்தைகள் உயர்ந்து முடிவடைந்தன. ஜப்பானின் நிக்கி 0.83 சதவீதமும், ஹேங்செங்க், 1.66% மற்றும் ஷாங்காய் காம்போசிட் 1.01 சதவீதமும் உயர்ந்து முடிவடைந்தன. ஐரோப்பிய சந்தைகளும் ஏற்றத்துடனே வர்த்தகத்தை தொடங்கின.