ஹலால் தர சான்று பெற்ற பொருட்கள் விற்க தடை @ உ.பி

ஹலால் தர சான்று பெற்ற பொருட்கள் விற்க தடை @ உ.பி
Updated on
1 min read

லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் ஹலால் தர சான்று பெற்ற பொருட்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை அந்த மாநில அரசு பிறப்பித்துள்ளது.

ஹலால் தர சான்றுடன் கூடிய உணவுப் பொருட்களின் உற்பத்தி, விநியோகம் மற்றும் விற்பனை ஆகியவை உடனடியாக தடை செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும், ஏற்றுமதி ரீதியாக உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் இந்த கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது அல்ல என அரசு தெரிவித்துள்ளது. இந்த விதிமுறைகளை மீறி செயல்படும் தனிநபர் மற்றும் நிறுவனத்துக்கு எதிராக சட்ட ரீதியாக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

மத ரீதியான உணர்வுகளின் அடிப்படையில் விற்பனையை அதிகரிக்க போலி ஹலால் தர சான்றிதழ் வழங்கிய விவகாரத்தில் சில நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் மீது அண்மையில் அம்மாநில காவல் துறை வழக்கு பதிவு செய்தது. ஹலால் இந்தியா பிரைவேட் லிமிடெட் சென்னை, ஜமியத் உலமா-இ-ஹிந்த் ஹலால் டிரஸ்ட் டெல்லி, ஹலால் கவுன்சில் ஆஃப் இந்தியா மும்பை, ஜமியத் உலமா மகாராஷ்டிரா ஆகிய நிறுவனங்கள் அடங்கும்.

ஹலால் தர சான்றிதழ் இல்லாத நிறுவனங்களின் தயாரிப்புகளின் விற்பனையை குறைப்பதற்கான நோக்கத்திலும், நிதி ஆதாயமும் இதன் பின்னணியில் இருப்பதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில உணவுப் பொருட்களின் லேபிள்களில் ஹலால் தர சான்றிதழ் என குறிப்பிடப்பட்டு விற்பனை மேற்கொள்ளப்பட்டதாக உணவுத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய விதிகளுக்கு உட்பட்டு தயாரிக்கப்பட்ட உணவு மற்றும் கலப்படமற்ற பொருள் என்பதற்கான உத்தரவாதம் தான் ஹலால் தர சான்று. மேலும், இந்த பொருட்கள் பிரத்யேகமாக பதப்படுத்தி வைக்கப்படும். இந்த விதிகளின் கீழ் தடை செய்யப்பட்ட சில விலங்குகள் மற்றும் அது சார்ந்த பொருட்கள் ஒரு குறிப்பிட்ட தயாரிப்பில் இடம்பெற்று இருந்தால் அதற்கு இந்த சான்று கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in