

தஞ்சாவூர்: தீபங்கள் பேசும்... இது கார்த்திகை மாதம்... மணிகள் போலவே அசைந்து ஆடுதே தீபமே என வீடுகளில் பெண்கள் உற்சாகமாக விளக்கேற்ற தஞ்சாவூரில் விதவிதமாக மண் விளக்குகளை தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அவ்வப்போது மழை பெய்து வருவதால் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கவலை தெரிவித்தனர். தஞ்சாவூர் கீழவாசல் பகுதிகளில் 50-க்கும்மேற்பட்டோர் மண்பாண்டத் தொழில் செய்து வருகின்றனர்.
வரும் 26-ம் தேதி கொண்டாடப்பட உள்ளகார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, இவர்கள் தற்போது அகல்விளக்கு, திருஷ்டி விளக்கு, அன்னகாமாட்சி விளக்கு, குத்து விளக்கு, நந்தி விளக்கு, சர விளக்கு என 20 வகையான விளக்குகளை தயாரித்து வருகின்றனர். இந்த விளக்குகள் ரூ.1 முதல் ரூ.1,500 வரை விற்கப்படுகின்றன. இந்நிலையில், தற்போது அவ்வப்போது மழைபெய்து வருவதால், தயாரிக்கப்படும் விளக்குகளை சூளையில் வைத்து சுடமுடியாமலும், வெயிலில் காய வைக்க முடியாமலும் தொழிலாளர்கள் தவித்து வருகின்றனர்.
இதுகுறித்து மண் விளக்குகள் தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டுள்ள கண்ணன் கூறியது: ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபத்தின்போது மழை பெய்வதால், மண் விளக்குகள் தயாரிக்கும் பணி பாதிக்கப்படுகிறது. இந்த ஆண்டும் தற்போது அவ்வப்போது மழை பெய்து வருவதால், தயாரித்து வைக்கப்பட்டுள்ள விளக்குகளை சூளையில் வைத்து சுட்டு, வெயிலில் காய வைக்க முடியவில்லை. எங்களுக்கு தமிழகஅரசு வழங்கும் மழைக்கால நிவாரணத்தை ரூ.5 ஆயிரத்திலிருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தி, அதை உரிய காலத்தில் வழங்கினால் எங்களது வாழ்வாதாரத்துக்கு பேருதவியாக இருக்கும்.
மேலும், கடந்த சில ஆண்டுகளாக வெளிமாநிலங்களிலிருந்து வரும் பீங்கான் விளக்குகள், மெழுகு விளக்குகள் போன்றவற்றால் பாரம்பரியமான மண் விளக்குகளுக்கு மவுசு குறைந்து, தொழிலும் பாதிக்கப்பட்டு வருகிறது. அத்துடன், மண்பாண்டத் தொழிலுக்கு தேவையான களிமண் கிடைப்பதிலும் சிக்கல் உள்ளது. எனவே, இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.