

கோவை: தமிழக ஜவுளித்தொழில் மற்ற மாநிலங்களுடன் போட்டியிடும் வகையில், பல்வேறு சலுகைகள் அடங்கிய புதிய ஜவுளி கொள்கை விரைவில் வெளியிடப்படும் என, கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி தெரிவித்தார். தமிழக அரசின் துணிநூல் துறை, மத்திய அரசின் ஜவுளித்துறை மற்றும் இந்திய தொழில்கள் கூட்டமைப்பு சார்பில் தொழில்நுட்ப ஜவுளி கருத்தரங்கு கோவையில் நேற்று நடந்தது. தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தலைமை வகித்து பேசியதாவது: அதிக வேலைவாய்ப்புகளை வழங்கும் தொழிலாக ஜவுளித் தொழில் விளங்குகிறது. எதிர்காலம் தொழில்நுட்ப ஜவுளித் துறையின் வளர்ச்சியை சார்ந்தே அமையும் என்பதை உணர்ந்த தமிழக அரசு, ஜவுளித் துறைக்கு முன்னுரிமை அளித்து அதனை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
கடந்தாண்டு சென்னையில் பன்னாட்டு தொழில்நுட்ப ஜவுளி கருத்தரங்கு நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக இரண்டாவது நிகழ்வு கோவையில் நடத்தப்படுகிறது. ஜவுளித் தொழில்நுட்ப வளர்ச்சியை ஊக்கப்படுத்த சிறப்பான திட்டங்களை வகுத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன. தமிழக ஜவுளித் தொழில் மற்ற மாநிலங்களுடன் போட்டியிடும் வகையில், பல்வேறு சலுகைகள் அடங்கிய புதிய ஜவுளி கொள்கை விரைவில் வெளியிடப்படவுள்ளது. இந்தியாவில் ஜவுளித் தொழிலில் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக உருவாக்க முதலமைச்சர் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார்.
சிறிய அளவிலான ஜவுளிப் பூங்கா அமைக்க முன்வரும் தொழில்முனைவோருக்கு தகுதிவாய்ந்த திட்ட மதிப்பில் (பொது உள்கட்டமைப்பு வசதிகள், பொதுப் பயன்பாட்டுக்கான கட்டிடங்கள்) 50 சதவீதம் அல்லது ரூ.2.5 கோடி தமிழ்நாடு அரசின் மானியமாக வழங்கப்படும். சேலத்தில் 119 ஏக்கரில் ரூ.881 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா தொடங்கப்பட உள்ளது. இக்கருத்தரங்கு தொழில்நுட்ப ஜவுளித்துறையின் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் மற்றும் சாத்தியக்கூறுகள் குறித்து தொழில்முனைவோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் தொழில்நுட்ப ஜவுளித் துறையில் தேசிய மற்றும் பன்னாட்டு முதலீட்டாளர்களை தமிழ்நாட்டுக்கு ஈர்க்கும்.
ஆராய்ச்சி மேம்படுவதோடு தொழில்நுட்ப ஜவுளி ஏற்றுமதிக்கான சந்தை வாய்ப்புகள் விரிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தின் பொருளாதாரத்தை 2030-க்குள் 1 டிரில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்த வேண்டும் என்ற முதல்வரின் எண்ணத்திற்கேற்ப அந்த இலக்கை அடைய இந்த கருத்தரங்கு உறுதுணையாக இருக்கும் என நம்புகிறேன். இவ்வாறு அவர் பேசினார். தொழில்நுட்ப ஜவுளி சார்ந்த பிரத்யேக அமர்வுகளில் 16-க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப வல்லுநர்கள் பங்கேற்று, ஜவுளித் துறை சார்ந்த தகவல்களை பகிர்ந்து கொண்டனர். 600-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனர். மத்திய ஜவுளித்துறை அமைச்சக இணைச் செயலர் ராஜீவ் சக்சேனா, துணிநூல் மற்றும் கதர் துறை அரசு முதன்மைச் செயலர் யாதவ், மத்திய ஜவுளித்துறை ஆணையர் ரூப்ராசி, இந்திய தொழில்கள் கூட்டமைப்பு தலைவர் சங்கர் வானவராயர், ‘பியோ’ தலைவர் சக்திவேல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.