Published : 17 Nov 2023 04:06 AM
Last Updated : 17 Nov 2023 04:06 AM

குறைந்த செலவில் சிறுதானியங்கள் பயிரிடும் கமுதி விவசாயிகள்

ராமநாதபுரம்: கமுதி பகுதியில் குறைந்த செலவில் சிறுதானியங்கள் பயிரிட்டு விவசாயிகள் அதிக லாபம் ஈட்டுகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்தாண்டு 1.25 லட்சம் ஹெக்டேர் நெல் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மானாவாரியாக நெல்லுக்கு அடுத்த படியாக மாவட்டத்தில் சோளம், மக்காச்சோளம், கம்பு, குதிரை வாலி, சாமை, தினை போன்ற சிறுதானிய பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. இதுவரை சோளம் 1585 ஹெக்டேரிலும், மக்காச்சோளம் 208 ஹெக்டேரிலும், கம்பு 65 ஹெக்டேரிலும் என 2400 ஹெக்டேரில் சிறு தானியங்கள் பயிரிடப்பட்டுள்ளன.

மேலும் இந்த மகசூல் முடிந்து, இரண்டாம் சாகுபடியாக சிறுதானியங்கள் பயிரிடும்போது மாவட்டத்தில் 8 ஆயிரம் ஹெக்டேர் பரப்பைத் தாண்டும் என வேளாண் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக மழை மறைவுப் பிரதேசமான கமுதி, கடலாடி, முதுகுளத்தூர் வட்டாரங் களில் அதிகளவில் சிறுதானியங்கள் பயிரிடப்படுகின்றன. அதிலும் குறிப்பாக சோளம், மக்காச்சோளம், கம்பு, குதிரைவாலி ஆகிய சிறு தானியங்கள் கமுதி வட்டாரத்தில் அதிகம் பயிரிடப்படுகின்றன.

இந்தாண்டு வடகிழக்குப் பருவ மழை சரியான நேரத்தில் பெய்ததால் இப்பகுதியில் சிறுதானியங்கள் நன்கு வளர்ந்து கதிர்கள் விட்டு எங்கு பார்த்தாலும் பசுமையாக காட்சியளிக்கின்றன. சிறுதானியங்கள் பயிரிட ஏக்கருக்கு ரூ.5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் வரை செலவாகும். ஆனால் ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வரை மகசூல் கிடைக்கும். மேலும் சிறுதானியங்களுக்கு களை எடுத்தல், உரமிடுதல், மருந்து தெளித்தல் போன்ற பணிகள் செய்ய வேண்டியதில்லை. அதனால் கமுதி பகுதி விவசாயிகள் குறைந்த செலவில் சிறுதானியங்கள் பயிரிட்டுள்ளனர்.

இது குறித்து கமுதி அருகே பேரையூர் விவசாயி கந்த சாமி கூறும் போது, இந்தாண்டு சரியான நேரத்தில் பருவ மழை பெய்ததால் சோளம், கம்பு பயிர்கள் நன்கு வளர்ந்துள்ளன. இதன் மூலம் ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வரை லாபம் கிடைக்கும் என்றார்.

ராமநாதபுரம் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) தனுஷ் கோடி கூறும்போது, மாவட்டத்தில் வறட்சியான பகுதிகளில் நெல் பயிரிடுவதைத் தவிர்த்து சிறு தானியங்களே அதிகளவில் பயிரிட வேண்டும். இந்தாண்டை சிறு தானிய ஆண்டாக அரசு அறிவித்துள்ளது. அதனால் குறைந்த செலவில் அதிக லாபம் ஈட்டும் சிறு தானியங்களுக்கு விவசாயிகள் முக்கியத்துவம் கொடுத்து பயிரிட வேண்டும் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x