

விருதுநகர்: மூலிகை தேன் உற்பத்தியில் ஈடுபட்டு வெற்றிகரமான பெண் தொழில் முனைவோராக திகழ்கிறார் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த எம்பிஏ மாணவி பூர்ணமாலா. அருப்புக்கோட்டை பாரதி நகரைச் சேர்ந்தவர் பிரபாகரன். கூட்டுறவு சங்கத்தில் மேலாளராகப் பணியாற்றி ஓய் வுபெற்றவர். இவரது மகள் பூர்ணமாலா (21), விருதுநகரில் உள்ள செந்திக்குமார நாடார் கல்லூரியில் எம்.பி.ஏ. முதலாமாண்டு படித்து வருகிறார். படிக்கும்போதே ஏதாவது சிறு தொழிலில் ஈடுபட வேண்டும் என்று முடிவு செய்த பூர்ணமாலா, தனது வீட்டிலிருந்தபடியே தேன் உற்பத்தியை தொடங்கினார். வழக்கமான தேனாக இல்லாமல், மூலிகை சத்து நிறைந்த பல வகை தேனை உற்பத்தி செய்ய திட்டமிட்டு, அதில் சாதித்துள்ளார். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வெற்றிகரமான தொழில் முனைவோராக வலம் வருகிறார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: மலைத்தேன், கொம்புத்தேன், நாவல் தேன், வேம்புத்தேன், முருங்கைத்தேன், குங்குமப்பூ தேன், துளசி தேன், இஞ்சி தேன், லவங்கப்பட்டை தேன், உலர் பழத் தேன், உலர் அத்திப் பழத்தேன், தேன் அடை என பல தேன் உற்பத்தி செய்கிறோம். குன்னூர் வனப் பகுதியில் இருந்து மலைத்தேன் எடுத்து வருகிறோம். கொம்புத்தேனும் ஆட்கள் மூலம் சேகரிக்கிறோம். நாவல் தேன் அழகர்கோவில் சாலையில் சில இடங்களில் கூடுகள் அமைத்து சுமார் 6 மாத காலம் சேகரிப்போம். வேம்புத்தேன் எங்கள் வீட்டுப்பகுதியில் உள்ள வேப்ப மரங்கள் மூலம் சேகரிக்கிறோம். முருங்கைத் தேனுக்காக திருச்செந்தூர் சாலையில் குறிப்பிட்ட நிலங்களை குத்தகை பேசி அங்கு தேன் கூடுகளை அமைத்து சேகரிக்கிறோம்.
துளசி தேனுக்கு தேனை சூடாக்கி அதில் துளசி சாறு கலந்து தயாரிக்கிறோம். இதேபோன்று, இஞ்சி தேன், லவங்கப்பட்ட தேன் போன்றவற்றையும் தயாரிக்கிறோம். உலர் பழத் தேனுக்காக மண்பானையில் உலர் பழங்களில் தேன் ஊற்றி 48 நாள்கள் ஊறவைத்து தயாரிக்கிறோம். இதுபோன்ற தேன் வகைகள் மருத்துவக் குணம் கொண்டவை என்பதால் பலர் விரும்பி வாங்கிச் செல்கின்றனர். எனது தொழில் முயற்சிக்கு தந்தையும், அண்ணனும் உறுதுணையாக உள்ளனர். எங்களிடம் பலர் நேரடியாக வந்து தேன் வாங்கிச் செல்கின்றனர். இது தவிர திருவிழாக்கள், முக்கிய நிகழ்வுகள், கல்லூரி, பல்கலைக்கழக விழாக்களில் அரங்கம் அமைத்து தேன் விற்பனை செய்து வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.