நிலங்களில் மருந்து தெளிக்க ட்ரோன் மானியம் வழங்கப்படுமா? - விவசாயிகள் எதிர்பார்ப்பு

நிலங்களில் மருந்து தெளிக்க ட்ரோன் மானியம் வழங்கப்படுமா? - விவசாயிகள் எதிர்பார்ப்பு
Updated on
1 min read

கோவில்பட்டி: மானாவாரி நிலங்களில் உயர்ந்து வளர்ந்துள்ள களைகளை அழிக்க மருந்து தெளிப்பதற்கு, ட்ரோன் வாங்க மானியம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் கோடை மழை மற்றும் ஆவணி மாத கடைசியில் சில கிராமங்களில் பெய்த மழையை நம்பி விவசாயிகள் மானாவாரி பயிர்களுக்கான விதை விதைத்தனர். விதைத்த நாளில் இருந்து சுமார் 35 நாட்கள் மழை பெய்யவில்லை. இதனால் நிலத்துக்கு அடியில் இருந்த விதைகள் கெட்டு விட்டன. பின்னர் மீண்டும் விதைப்பு செய்யப்பட்டது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் வடகிழக்கு பருவ மழையால் விதைகள் முளைத்து பயிர்கள் வளர்ந்து வருகின்றன.

தொடர்ந்து மழை பெய்ததால் களை அதிகமாக முளைத்துள்ளது. தொடர்ந்து மழை பெய்வதால் நிலங்களில் அதிக ஈரப்பதம் காணப்படுகிறது. இதனால் நிலங்களில் இறங்கி பணி செய்ய முடியாததால், களை எடுக்க முடியவில்லை. பயிர்களை விட களை உயரமாக வளர்ந்துவிட்டது. பயிர்களை காப்பாற்ற கை தெளிப்பான் மற்றும் விசை தெளிப்பான் மூலம் களைக்கொல்லிகளை விவசாயிகள் தெளித்து வருகின்றனர். இதற்கான கூலி ஆட்கள் சம்பளம் உயர்ந்துவிட்டது. வேலை ஆட்கள் பற்றாக்குறையும் கடுமையாக உள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கும் முறை பிரசித்தமாகி வருகிறது. இதனால் ஆட்கள் பற்றாக்குறை மற்றும் செலவு மிகவும் குறைவாக ஏற்படுகிறது. எனவே மருந்து தெளிக்கும் ட்ரோன் வாங்க அரசு விவசாயிகளுக்கு மானியம் வழங்க வேண்டும். மேலும், ஒவ்வொரு வேளாண் விரிவாக்க மையத்திலும் ட்ரோன் வாங்கி வைத்து, வாடகைக்கு விட வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in