Published : 16 Nov 2023 06:36 AM
Last Updated : 16 Nov 2023 06:36 AM
புதுடெல்லி: டெல்லியில் நேற்று நடைபெற்ற இந்திய-பசிபிக் பிராந்திய கூட்டத்தில் பங்கேற்ற மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: டெல்லியில் கடந்த செப்டம்பர் 9-10 தேதிகளில் நடைபெற்ற 18-வது ஜி20 உச்சி மாநாட்டில் ஐஎம்இசி திட்டம் முன்மொழியப்பட்டு அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இந்தியா - மத்திய கிழக்கு - ஐரோப்பா இடையே போக்குவரத்துவழித்தடத்தை ஏற்படுத்துவதன் மூலம் இந்த நாடுகளிடையே பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிக்க முடியும். அதன் மூலம், சரக்கு போக்குவரத்தின் செயல் திறனை அதிகரிக்க முடியும் என்பதுடன் போக்குவரத்து செலவுகளை குறைத்தல், வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், கார்பன் வெளியேற்றத்தை குறைத்தல் ஆகிய எண்ணற்ற நன்மைகளை இந்த திட்டத்தில் பங்கேற்கும் நாடுகள் பெற முடியும்.
ஐஎம்இசி என்பது கப்பல், ரயில்வே மற்றும் சாலை வழிகள் என பல நெட்வொர்க்குகளை உள்ளடக்கிய மல்டிமாடல் பொருளாதர வழித்தட திட்டமாகும். மின்சார கேபிள், அதிவேக டேட்டா கேபிள் மற்றும் ஹைட்ரஜன் பைப்லைன் கட்டமைப்புகளை உருவாக்குவது இந்த திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
இந்த திட்டத்தில் கடல்வழியானபோக்குவரத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. ஜவகர்லால் நேரு, முந்த்ரா (குஜராத்),கண்ட்லா (குஜராத்) துறைமுகங்களுடன், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள புஜைரா, ஜெபல் அலி மற்றும் அபுதாபி உள்ளிட்ட மேற்கு ஆசிய துறைமுகங்களையும், சவுதி அரேபியாவின் தம்மாம், ராஸ்துறைமுகங்களையும் இணைக்க முடியும். இஸ்ரேலில் உள்ள ஹஃபாதுறைமுகத்திற்கு இணைப்பை வழங்கும் வகையில் சிறப்பு ரயில் சேவைப் பிரிவும் ஏற்படுத்தப்படும்.
சிங்கப்பூர், யுஏஇ, ஜெர்மனி,அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ரஷ்யா, தென் ஆப்பிரிக்கா நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்திய துறைமுகங்களின் செயல்பாடு சிறப்பான முன்னேற்றத்துடன் காணப்படுகிறது. அதன் காரணமாக, சர்வதேச சரக்கு கப்பல் போக்குவரத்தில் 2014-ல் 44-வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 22-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
தெற்காசியா, மேற்கு ஆசியா இடையே பொருளாதார ஒருங்கிணைப்பை ஏற்படுத்த நம்பகமான திட்டமாக ஐஎம்இசி இருக்கும். இதனை உணர்ந்து, அதற்கு தேவையான நிதி ஆதாரம் மற்றும் கொள்கைகளை உருவாக்க இந்தியா தயாராக உள்ளது.
உலகளவில் மந்த நிலை காணப்பட்டபோதிலும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மிகச் சிறப்பாக உள்ளது. நடப்பாண்டில் இந்த வளர்ச்சி 7 சதவீதத்துக்கும் கீழாகவே இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், வரும் 2027-ம் ஆண்டில் ஜப்பான் மற்றும் ஜெர்மனி நாடுகளை பின்னுக்குத் தள்ளி இந்தியா உலகப் பொருளாதாரத்தில் மூன்றாவது இடத்தை தக்க வைக்கும். அப்போது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது (ஜிடிபி) 5 டிரில்லியன் டாலர் என்ற மைல்கல்லை தாண்டும் என்பது ஐஎம்எப்-ன் மதிப்பீடாக உள்ளது.
2047-ம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடு என்ற அந்தஸ்தை எட்ட வேண்டும் என்பதே இந்தியாவின் விருப்பம். அதற்கேற்ற வகையிலான நடவடிக்கைகளை அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT