பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்

பிரதமரின் வெகுமதி நிதி 15-வது தவணை விடுவிப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

Published on

கோவில்பட்டி: பிரதம மந்திரி விவசாயிகள் வெகுமதி நிதி உதவி திட்டத்தின் கீழ் 15-வது தவணையாக ரூ.2000 விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

பாரத பிரதமராக நரேந்திர மோடி 2-வது முறையாக பொறுப்பேற்ற பின்னர், விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையில், ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் 3 தவணைகளாக வழங்கப்படும் என அறிவித்தார். 5 ஆண்டு திட்டமான இதில் கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. இதன் கடைசி தவணையான 15-வது தவணை தொகை ரூ.2 ஆயிரம் நேற்று (15-ம் தேதி) விவசாயிகளின் வங்கி கணக்குகளில் வரவுவைக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், “2019-ம் ஆண்டு முந்தைய பட்டாதாரர் பெயருக்கு தான் பிரதம மந்திரி விவசாயிகள் வெகுமதி நிதி உதவி திட்டத்தில் நிதி உதவி வழங்கப்பட்டது. 2019-க்கு பின்னர் புதிதாக பட்டா மாற்றம் செய்தவர்களுக்கு இந்த திட்டத்தில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. 5 ஆண்டு திட்டத்துக்கான 15-வது தவணை விடுவிக்கப்பட்ட பின்னர் தற்போது பயனடைந்து வரும் விவசாயிகளும், 2019-ம் ஆண்டுக்கு பின்னர் பட்டா மாற்றம் செய்து பயனடைய முடியாமல் உள்ள விவசாயிகளும் ஜனவரி மாதத்துக்கு பின் தங்களது பட்டா மற்றும் ஆதார், பான் அட்டை, குடும்ப அட்டை ஆகியவற்றை கொண்டு மீண்டும் விண்ணப்பம் செய்ய வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும், 5 ஆண்டு திட்டமாக ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்ட நிதி ரூ.8 ஆயிரமாக உயர்த்தி வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இயற்கை சீற்றங்கள், இடைத்தரகர்கள் நெருக்கடி என நாங்கள் ஒருபுறம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டாலும், விவசாயிகளை ஊக்குவிக்க மத்திய அரசு எடுத்துள்ள முயற்சியை வரவேற்கிறோம்,” என்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in