Published : 12 Nov 2023 06:30 AM
Last Updated : 12 Nov 2023 06:30 AM
ஓசூர்: தீபாவளி பண்டிகையையொட்டி ஓசூர் பகுதியில் சாமந்தி பூ அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக இறங்கியுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், பாகலூர், உத்தனப்பள்ளி,தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் குளிர்ந்த சீதோஷண நிலை காரணமாக சாமந்தி, செண்டுமல்லி, பட்டன் ரோஜா உள்ளிட்ட மலர்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இவற்றை விவசாயிகள் அறுவடை செய்து, ஓசூர் மலர்சந்தைக்கு கொண்டு வந்து, அங்கிருந்து சென்னை, சேலம், கோவை மற்றும் பெங்களூருவுக்கு விற்பனைக்கு அனுப்புகின்றனர்.
இந்நிலையில் மழை மற்றும் சீதோஷண நிலை மாற்றத்தால், சாமந்தி பூக்கள் வரத்து அதிகரித்தது. இதனால் சாமந்தி பூவுக்கு, விநாயகர் சதூர்த்தி பண்டிகையிலிருந்தே ரூ.10 முதல் ரூ.20 வரை விற்பனையானது. இதனால், போதிய விலை கிடைக்காமல் விவசாயிகள் கவலையடைந்தனர். இந்நிலையில் தீபாவளி பண்டிகையின் போது, விலை உயரும் என விவசாயிகள் அறுவடை செய்யாமல் பூக்களை தோட்டங்களிலேயே விட்டு வைத்திருந்தனர். ஆனால் சாமந்தி பூக்கள் வரத்து தொடர்ந்து அதிகரிப்பால், தீபாவளி நேரத்திலும் விலை உயரவில்லை. இதன்காரணமாக, அறுவடை செய்யும் பூக்களை விவசாயிகளே நேரடியாக விற்பனை செய்து வருகின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறும் போது, வழக்கமாக ஒரு ஏக்கருக்கு 1 டன் சாமந்தி விளைச்சல் கிடைத்த நிலையில், மழை மற்றும் சீதோஷண நிலை மாற்றத்தால் தற்போது ஒரு ஏக்கருக்கு 3 டன் வரை விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால் கடந்த சில மாதங்களாகவே சாமந்தி மற்றும் செண்டு மல்லிக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் அதிர்ச்சியில் இருந்தனர். அறுவடை செய்த மலர்களை சாலையோரங்களில் வீசிச்செல்லும் அவல நிலையும் காணப்பட்டது. தீபாவளி பண்டிகைக்கு விலை உயரும் என எதிர்பார்த்தோம்.
ஆனால் கடந்து ஆண்டு மலர்சந்தையில் தீபாவளி பண்டிகையின் போது,ரூ.200 முதல் ரூ.300 வரை விற்பனை ஆன சாமந்தி பூ, தற்போது முதல் தரம் ரூ.120-க்கும் 2- ம் தரம் ரூ.80-க்கும், 3-ம் தரம் ரூ.40- க்கும் விற்பனையானது. ஆனால் வியாபாரிகள் இதற்கும் குறைவாக தங்களிடம் கேட்பதால் வேறு வழியின்றி, சென்னை கோயம்பேடு, ஈரோடு மற்றும் கிருஷ்ணகிரி, தருமபுரி பகுதிகளுக்கு வாகனங்கள் வைத்து நேரடியாக கொண்டு சென்று கிடைத்த விலைக்கு விற்பனை செய்கிறோம் எனக் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT