Published : 12 Nov 2023 06:30 AM
Last Updated : 12 Nov 2023 06:30 AM

தீபாவளியை முன்னிட்டு பூக்கள் விலை உயர்வு

திருநெல்வேலி டவுன் பூ மார்க்கெட்டில் குவிந்த மக்கள். படம்: மு.லெட்சுமி அருண்

திருநெல்வேலி/ தென்காசி/நாகர்கோவில்: தீபாவளியை முன்னிட்டு திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பூக்கள் விலை வழக்கத்தைவிட நேற்று உயர்ந்திருந்தது. திருநெல்வேலி சந்திப்பு பூ மார்க்கெட்டில் கடந்த சில நாட்களாக கிலோ ரூ.1,000-க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லிகைப்பூ நேற்று காலையில் ரூ.1500-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதுபோல் பிச்சிப்பூ விலை கிலோ ரூ.1,000-ல் இருந்து ரூ.1,300-ஆக அதிகரித்திருந்தது. அதேநேரத்தில் மற்ற பூக்களின் விலையில் மிகப்பெரிய மாற்றம் இருக்கவில்லை. இந்நிலையில் பிற்பகலில் பெய்த தொடர் மழையால் மல்லி, பிச்சிப்பூக்களின் விலை குறைந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் பரவலான பகுதிகளில் பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது. சங்கரன்கோவில், தென்காசி, சிவகாமிபுரம் சந்தைகளில் விவசாயிகள் அறுவடை செய்த பூக்களை விற்பனை செய்கின்றனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்றது. பூக்கள் வரத்தும் அதிகமாக இருந்தது. இருப்பினும் தேவை அதிகரிப்பால் பூக்கள் விலை உயர்ந்தது. சங்கரன்கோவிலில் ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கனகாம்பரம் நேற்று 2 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ மல்லிகை ரூ.1,100-க்கும், பிச்சிப்பூ 1,400 -க்கும் விற்பனை செய்யப்பட்டது. கேந்தி , கோழிக்கொண்டை 60 ரூபாய்க்கும், செவ்வந்தி ரூ.50, தாமரை ஒன்று ரூ.15, ஊட்டி ரோஜா கிலோ ரூ.170 , சம்மங்கி ரூ.100, அரளி ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்டது. அனைத்து வகை பூக்களும் சிறிதளவு விலை உயர்ந்துள்ளது.

தோவாளையில் அமோகம்: கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தைக்கு திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல், சத்தியமங்கலம், ஓசூர், பெங்களூரு, உதகை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று தோவாளை சந்தையில் பூக்கள் விற்பனை களைகட்டியிருந்தது. பிச்சி, மல்லிகை கிலோ ரூ.1,000-க்கு விற்பனையானது. அரளி ரூ.200, சம்மங்கி ரூ.250, கோழிக்கொண்டை ரூ.200, கிரேந்தி ரூ.50, கனகாம்பரம் ரூ.400, துளசி ரூ.30 என விற்பனையானது.

பூக்கள் விலை உயர்வால் மலர் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.தீபாவளி இன்று கொண்டாடப்படும் நிலையில், நாகர்கோவிலில் உள்ள ஜவுளிக்கடைகள், இனிப்பகங்கள், பட்டாசு கடைகளில் நேற்று கூட்டம் அதிகமிருந்தது. கடைவீதிகள் விழாக்கோலம் பூண்டிருந்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x