

புதுடெல்லி: இந்தியாவில் தொழிற்சாலைகளில் பெண் ஊழியர்களை அதிகம் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.
மத்திய தொழிலாளர் அமைச்சகம் வெளியிட்ட 2019-20-ம் ஆண்டுக்கான தொழிற்துறை புள்ளிவிவரங்களின்படி, இந்திய அளவில் தொழிற்சாலைகளில் 15.80 லட்சம் பெண்கள் வேலை செய்கின்றனர். இவர்களில் 6.79 லட்சம் பேர் தமிழ்நாட்டில் உள்ள தொழிற்சாலைகளில் வேலை செய்கின்றனர்.
இது இந்திய அளவில் தொழிற்சாலைகளில் பணிபுரியும் மொத்த பெண் ஊழியர்களின் எண்ணிக்கையில் 43 சதவீதம் ஆகும். அதேபோல், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களை சொந்தமாக நடத்தும் பெண்களின் எண்ணிக்கையில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது.
சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற, தொழிற்துறை விருதுவழங்கும் விழாவில் பங்கேற்ற தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல்தியாகராஜன் பேசுகையில், “இந்தியாவில் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் பெண்களில் 10-ல் 4 பேர் தமிழ்நாட்டில் உள்ளநிறுவனங்களில் வேலை செய்பவர்கள். தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பில் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. பெண்களின் மேம்பாட்டுக்காக தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெடுப்புகளை வழங்கி வருகிறது.
அரசு துறையில் வேலை செய்யும் பெண்களுக்கான பேறுகால விடுப்பு 1 ஆண்டாக நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல், அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணமில்லாமல் பயணம் செய்யும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. முன்னேற்றப் பாதையில் பயணிக்க வேண்டுமென்றால், பெண்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் வழங்க வேண்டும்” என்று தெரிவித்தார். இந்தியாவில் அதிக தொழிற்சாலைகளைக் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் 38,837 தொழிற்சாலைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.