

அரூர்: தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த கோபிநாதம்பட்டி வாரச் சந்தையில் தீபாவளியையொட்டி நேற்று ரூ.5 கோடிக்கு கால்நடைகள் வர்த்தகம் நடந்தது.
அரூர் அடுத்த கோபிநாதம்பட்டி கூட்டு ரோடு பகுதியில் வாரம் தோறும் புதன்கிழமையில் வாரச் சந்தை நடைபெறுகிறது. இந்த சந்தை வளாகத்தில் வாரச் சந்தை நாளன்று அதிகாலை முதல் காலை 9 மணி வரை கால்நடை விற்பனை நடைபெறும். அதன் பின்னர், இதர பொருட்களின் விற்பனை மாலை வரை நடைபெறும்.
வழக்கமாகவே கோபிநாதம்பட்டி கூட்டு ரோடு வாரச் சந்தை கால்நடைச் சந்தைக்கு தருமபுரி மட்டுமன்றி சுற்று வட்டார மாவட்டங்கள், ஆந்திரா, கேரளா மாநிலங்களில் இருந்தும் கால்நடைகள் வாங்க அதிக அளவிலானவர்கள் வருகை தருவர். இதர வாரங்களில் நடைபெறும் வாரச் சந்தைகளில் ரூ.2 கோடி வரை கால்நடை வர்த்தகம் நடைபெறும்.
ஆனால், விழாக்காலங்களையொட்டி நடைபெறும் சந்தையில் கால்நடை வர்த்தகம் அதிக அளவில் இருக்கும். அந்த வரிசையில் தீபாவளியை முன்னிட்டு நேற்று நடந்த சந்தையில் ரூ.5 கோடி வரை கால்நடை வர்த்தகம் நடந்தது.
இது குறித்து வியாபாரிகள் சிலர் கூறும்போது, ‘தீபாவளியின் போது இறைச்சித் தேவைக்காக ஆடுகளின் தேவை அதிகம் இருக்கும் என்பதால் இன்றைய (நேற்று) சந்தையில் அதிக அளவில் ஆடுகள் விற்பனை ஆனது. இது தவிர, கடந்த சில மாதங்களாக பெய்து வரும் மழையால் மேய்ச்சல் தரைகளில் பசும்புல் வளர்ச்சி கண்டிருக்கும் நிலையில் பலரும் வளர்ப்புக்காக ஆட்டுக் குட்டிகளையும், பசு மற்றும் எருமை களையும் வாங்கிச் சென்றனர்’ என்றனர்.