Published : 23 Jan 2018 09:42 AM
Last Updated : 23 Jan 2018 09:42 AM

இந்தியாவில் வருமான ஏற்றத்தாழ்வு அதிகரிப்பு: 73% சொத்து 1% பணக்காரர்களிடம் உள்ளது- ஆக்ஸ்பாம் ஆய்வறிக்கை அதிர்ச்சி தகவல்

சர்வதேச பொருளாதார மாநாடு தொடங்க உள்ள நிலையில் உலகில் உள்ள மக்களின் வருமானம் குறித்த ஆய்வை சர்வதேச நிறுவனமான ஆக்ஸ்பாம் வெளியிட்டுள்ளது. உலக அளவில் இந்தியாவில் தான் வருமான ஏற்றத்தாழ்வு மிக மோசமாக உள்ளதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

`வேலைக்கு வெகுமதி ஆனால் சொத்தில் அல்ல’’ என்ற தலைப் பில் ஆக்ஸ்பாம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதவது,

2017-ம் ஆண்டில் நாட்டில் உருவான வளத்தில், அதாவது சொத்துகள் அனைத்தும் 1% பணக்காரர்களிடம் குவிந்துள்ளது. மொத்தமுள்ள இந்திய மக்கள் தொகையில் 67 கோடி பேரின் வருமானம் கடந்த ஆண்டு 1 % உயர்ந்துள்ளது. சர்வதேச அளவில் மொத்தமுள்ள 370 கோடி மக்களின் வளம் 1% மக்களிடமே குவிந்துள்ளது. சர்வதேச அளவில் பாதிக்கும் அதிகமானோரின் வருமான அளவில் எவ்வித மாற்றமும் கடந்த ஆண்டு ஏற்படவில்லை.

2016-ம் ஆண்டில் ஒரு சதவீத பணக்காரர்களிடம் 58 % சொத்துகள் குவிந்திருந்தது தெரிய வந்தது. ஆனால் 2017-ல் இந்த நிலை மேலும் மோசமடைந்து 73 சதவீத சொத்துகள் ஒரு சதவீத பணக்காரர்கள் வசமே சேர்ந்துள்ளது. சர்வதேச அளவில் பணக்காரர்களிடம் குவிந்த அளவானது 50% என்ற நிலையில் இந்தியாவில் 73 சதவீத சொத்துகள் ஒரு சதவீத பணக்காரர்களிடம் குவிந்துள்ளது. 2017-ம் ஆண்டில் இந்தியா வில் 1% பணக்காரர்களின் சொத்து மதிப்பு ரூ.20.9 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இத் தொகையானது இந்திய அரசு வெளியிடும் பொது பட் ஜெட் தொகைக்கு நிகரானது.

2017-ம் ஆண்டில் முன்னெப்போதைக் காட்டிலும் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதாவது இரண்டு நாளில் ஒரு கோடீஸ்வரர் உருவாகின்றனர். இந்தியாவின் முன் னணி ஜவுளி நிறுவனத்தில் உயர் அதிகாரி பெறும் சம்பளத்தை சாதாரண தொழிலாளி எட்டுவதற்கு 941 ஆண்டுகள் பிடிக்கும். ஆனால் அமெரிக்காவில் ஒரு நிறுவன தலைமைச் செயல் அதிகாரி ஒரு நாளில் ஈட்டும் ஊதியத்தை அங்குள்ள சாதாரண தொழிலாளி ஒரு ஆண்டில் ஈட்டிவிட முடிகிறது என்றும் அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.

சர்வதேச அளவில் 10 நாடுகளில் உள்ள 70 ஆயிரம் பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது. இவர்களில் மூன்றில் இரண்டு பங்கு பேர், ஏழை - பணக்காரர்கள் இடையிலான வருமான விகிதம் அதிகரித்து வருவதையும் இது உடனடியாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்றும் தெரிவித்துள்ளனர்.

அனைத்து தரப்பினரும் வளம் பெறுவதற்கு வழி வகைகளை எடுக்க வேண்டும் என ஆக்ஸ்பாம் இந்திய அரசை வலியுறுத்தியுள்ளது. இந்தியா உள்பட அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் சிஇஓ-க்களின் சம்பளத்தை 60 % அளவுக்குக் குறைக்கலாம் என்று குறிப்பிட்டதாக ஆக்ஸ்பாம் கூறியுள்ளது.

2017-ம் ஆண்டில் இந்தியாவில் புதிதாக 17 கோடீஸ்வரர்கள் உருவாகியுள்ளனர். இதன் மூலம் நாட்டிலுள்ள பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை 101 ஆக உயர்ந்துள்ளது. இந்திய கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு ரு.4.89 லட்சம் கோடி அதிகரித்து அவர்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ.20.7 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இந்த சொத்தின் மூலம் அனைத்து மாநிலங்களும் கல்வி மற்றும் சுகாதாரத்துக்கு ஒதுக்கீடு செய்யும் தொகையில் 85 % அளவுக்கு ஈடுகட்ட முடியும்.

இந்தியாவில் உள்ள 10 சதவீத மக்களிடம் 73 சதவீத சொத்துகள் குவிந்துள்ளன. இதில் 37 சதவீத கோடீஸ்வரர்கள் தங்களின் குடும்ப சொத்துகளின் மூலம் இத்தகைய நிலைக்கு உயர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. நாட்டிலுள்ள கோடீஸ்வரர்களின் சொத் தில் 51 % இவர்கள் வசம் உள்ளதாகவும் ஆக்ஸ்பாம் அறிக்கை தெரிவித்துள்ளது.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியின் பலன் ஒரு சில கோடீஸ்வரர்கள் மட்டுமே அனுபவிப்பதாக ஆக்ஸ்பாம் சிஇஓ நிஷா அகர்வால் தெரிவித்தார்.

கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு பொருளாதார வளர்ச்சியை உணர்த்தும் காரணி அல்ல என்று குறிப்பிட்ட அவர், இது பொருளாதார வளர்ச்சியில் காணப்படும் தவறான போக்கை உணர்த்துவதாக உள்ளது.

நாட்டின் வேளாண் உற்பத்தியில் பாடுபடும் விவசாயி, கட்டமைப்பு வசதிக்காக உழைக்கும் உழைப்பாளி, தொழிற்சாலை பணியாளர்கள் தங்கள் குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கு பெரிதும் போராடுகின்றனர். குடும்ப முதியவர்களின் மருத்துவ செலவுகளை ஈடுகட்ட முடியாமல் திணறுகின்றனர். இவர்களுக்கு ஒரு நாளைக்கு இரண்டு வேளை உணவுக்கு சம்பாதிப்பதே பெரும் போராட்டமாக உள்ளது. இத்தகைய ஏற்றத்தாழ்வு அதிகரித்தால் நாட்டில் லஞ்சம் அதிகரிக்கவும், குரோனி முதலாளித்துவம் உருவாக வழி ஏற்படுத்தும் என்றும் நிஷா அகர்வால் எச்சரித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x