Published : 08 Nov 2023 04:04 AM
Last Updated : 08 Nov 2023 04:04 AM
ஈரோடு: தீபாவளி நெருங்கும் நிலையில், ஜவுளி கொள்முதலுக்காக வெளிமாநில, மாவட்ட வியாபாரிகள், ஈரோடு ஜவுளிச் சந்தைக்கு அதிக எண்ணிக்கையில் வந்ததால் விற்பனை களைகட்டியது.
ஈரோட்டில் வாரம் தோறும் திங்கள்கிழமை மாலை தொடங்கி, செவ்வாய் கிழமை வரை பன்னீர் செல்வம் பூங்கா அருகே ஜவுளி வாரச்சந்தை நடந்து வருகிறது. இந்த சந்தையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலங்கானா, மகாராஷ்டிரா போன்ற வெளி மாநிலங்களைச் சேர்ந்த வியாபாரிகளும் மொத்தமாக ஜவுளி கொள்முதல் செய்வது வழக்கம்.
தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், நேற்று முன் தினம் தொடங்கிய, ஈரோடு ஜவுளிச்சந்தையில் விற்பனை களைகட்டியது. ஈரோடு பன்னீர் செல்வம் பூங்கா ஜவுளிச் சந்தை, சென்ட்ரல் தியேட்டர், அசோகபுரம் பகுதிகளிலும் உள்ள ஜவுளிக் கடைகளில் விற்பனை அதிகரித்து காணப்பட்டது. வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து வந்த வியாபாரிகள, கனமழையையும் பொருட்படுத்தாமல், பெருமளவில் ஜவுளி கொள்முதல் செய்தனர்.
இது குறித்து ஜவுளி வியாபாரிகள் கூறியதாவது: தீபாவளிக்கான நாட்கள் நெருங்குவதால், ஜவுளி மொத்த விற்பனை மற்றும் சில்லறை விற்பனை இரண்டும் அதிகரித்துள்ளது. குழந்தைகளுக்கான ரெடிமேடு ரகங்கள், ஆண்களுக்கான வேஷ்டி, சட்டை, பெண்களுக்கான சுடிதார் மற்றும் பேன்சி ரக உடைகளின் விற்பனை அதிகரித்து காணப்பட்டது. இத்துடன் படுக்கை விரிப்பு, துண்டு, லுங்கி உள்ளிட்ட ஜவுளிரகங்களுக்கான ஆர்டரும் அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT