Published : 08 Nov 2023 04:20 AM
Last Updated : 08 Nov 2023 04:20 AM

நீதிமன்ற உத்தரவால் சிவகாசியில் பட்டாசு உற்பத்தி குறைந்தாலும் விற்பனை மும்முரம்

சிவகாசி: நீதிமன்ற உத்தரவு மற்றும் கட்டுப்பாடுகளால் சிவகாசியில் பட்டாசு உற்பத்தி குறைந்தது. ஆனால் விற்பனை அதிகரிப்பால் தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் 95 சத வீத பட்டாசுகள் விற்றுத் தீர்ந்தன.

நாட்டின் மொத்த உற்பத்தியில் 95 சதவீதத்துக்கும் அதிகமான பட்டாசுகள் சிவகாசி சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள 1,100-க்கும் அதிகமான பட்டாசு ஆலைகளில் உற்பத்தி செய்யப் படுகின்றன. பேரியம் நைட்ரேட் பயன்படுத்தி பட்டாசு உற்பத்தி செய்யவும், சரவெடி தயாரிக்கவும் உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.

இதனால் 40 சதவீதம் வரை பட்டாசு உற்பத்தி குறைந்தது. வெளி மாநிலப் பட்டாசு ஆர்டர்கள் ஒரு மாதத்துக்கு முன்பே நிறைவடைந்தாலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தீபாவளிக்கு முதல் நாள் வரை சிவகாசியில் பட்டாசு வாங்க வாடிக்கையாளர்கள் வருவது வழக்கம். அப்போது அனைத்து வகை பட்டாசுகளும் விற்பனைக்கு தயாராக இருப்பு இருக்கும்.

ஆனால், தற்போது சிவகாசியில் உள்ள பட்டாசு கடைகளில் 95 சதவீத பட்டாசுகள் விற்று விட்டதால் குறிப்பிட்ட சில பட்டாசுகள் மட்டுமே இருக்கின்றன. இதனால் தீபாவளி வரை பட்டாசு விற்பனை நடந்தாலும், வாடிக்கையாளர்கள் விரும்பும் பட்டாசுகளை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கத் (டான்பாமா) தலைவர் கணேசன் கூறியதாவது: உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, பட்டாசு தயாரிப்பில் பேரியம் நைட் ரேட் பயன்படுத்தாமல் பசுமைப் பட்டாசுகள் மட்டுமே உற்பத்தி செய்வதால் உற்பத்தி குறைந்துள்ளது. இதனால் மக்கள் விரும்புகிற, சரவெடி போன்ற பட்டாசுகளை உற்பத்தி செய்ய முடியவில்லை. ஆனாலும், 95 சதவீத பட்டாசுகள் விற்பனை முடிந்து விட்டது. அதே நேரம், வெளியூர்களில் இருந்து வாங்க வரும் மக்களுக்கு தட்டுப்பாடின்றி பட்டாசு கிடைத்து விடும் என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x