

சேலம்: வாகனங்களுக்கான காலாண்டு வரி உயர்வு ரத்து, மணல் குவாரிகளை அதிக எண்ணிக்கையில் திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 9-ம் தேதி லாரி உள்ளிட்ட சரக்கு வாகனங்கள் வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்படும் என்று மாநில லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் தனராஜ் தெரிவித்துள்ளார்.
மாநில லாரி உரிமையாளர் சம்மேளனம், சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கம், சேலம் மாவட்ட மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம், லாரி புக்கிங் ஏஜென்ட்கள் சங்கம், வாகன பழுது பார்ப்போர் சங்கம், டெம்போ வேன் உரிமையாளர்கள் சங்கம் ஆகியவற்றின் நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம், சேலம் கொண்டலாம்பட்டியில் உள்ள லாரி உரிமையாளர்கள் சங்க கட்டிடத்தில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்துக்குப் பின்னர் மாநில லாரி உரிமையாளர் சம்மேளனத் தலைவர் தனராஜ், செய்தியாளர்களிடம் கூறியது: வாகனங்களுக்கான காலாண்டு வரியை தமிழக அரசு 40 சதவீதம் உயர்த்தி உள்ளது. இதனை ரத்து செய்ய வேண்டும். இதேபோல், லாரிகள் மீது ஆன்லைன் மூலமாக அதிக எண்ணிக்கையில் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.
இதைக் கைவிட வேண்டும். மணல் லாரி உரிமையாளர்கள் அதிக எண்ணிக்கையில் மணல் குவாரிகளை திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இந்த 3 கோரிக்கைகளை தமிழக அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஏற்கெனவே சுங்கக் கட்டணம், டீசல் விலை உயர்வு ஆகியவற்றால் லாரி தொழில் நலிவடைந்துள்ளது. எனவே, தமிழக அரசு எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும்
ரூ.200 கோடி இழப்பு ஏற்படும்: எங்களது கோரிக்கைகளை முன்வைத்து, வரும் 9-ம் தேதி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தமிழகம் முழுவதும் ஒருநாள் லாரிகள் வேலை நிறுத்தம் நடைபெறும். இந்த வேலை நிறுத்தத்தில் 6.5 லட்சம் கனரக வாகனங்கள், 25 லட்சம் இலகு ரக வாகனங்கள் ஓடாது.
அத்தியா வசிய பொருட்களுக்கான வாகனங்கள் மட்டும் இயக்கப்படும் வேலை நிறுத்தம் செய்யப்படும் நாளில், ஆந்திரா, தெலங்கானா, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இருந்து வரும் லாரிகள், அந்தந்த மாநில எல்லைகளில் நிறுத்தி வைக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளோம். வேலை நிறுத்தம் காரணமாக, ரூ.5 ஆயிரம் கோடி அளவுக்கு வர்த்தகம் பாதிக்கும். லாரி உரிமையாளர்களுக்கு சுமார் ரூ.200 கோடி இழப்பு ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.