

புதுச்சேரி: புதுச்சேரியின் முக்கியத் தொழில்களில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக நெசவுக்கு இடமுண்டு. இந்த நெசவுத் தொழிலை வளர்க்கும் வகையில் தொடங்கப்பட்டது ‘பாண்டெக்ஸ்’ கூட்டுறவு நிறுவனம். புதுச்சேரி அரசு சார்பு நிறுவனமான ‘பாண் டெக்ஸ்’ நிறுவனம் 1957-ல் தொடங்கப்பட்டு, புதுச்சேரி மாநிலம் முழுவதும் 13-க்கும் மேற்பட்ட கூட்டுறவு நெசவாளர்கள் சங்கங்கள் இந்நிறுவனத்தோடு இணைந்து செயல்பட்டு வந்தன.
தட்டாஞ்சாவடி நெசவாளர்கள் சங்கம்,கருவடிக்குப்பம், லாசுப்பேட்டை, முத்தியால் பேட்டை, வில்லியனூர், சண்முகாபுரம் என பல்வேறு பகுதிகளில் நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வந்தன. ஒவ்வொரு கூட்டுறவு சங்கங்களிலும் 200-க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் அவரது குடும்பங்கள் நூலிழை போன்று பின்னிப் பிணைந்த தங்கள் வாழ்வி யலோடு இணைந்த நெசவுத் தொழிலை செய்து வந்தனர். புதுச்சேரி அரசின் கையறு நிலையினால் கூட்டுறவு சங்கங்கள் நலிவுற்று, தற்போது நெசவாளர்கள் குடும்பங்கள் நடுவீதிக்கு தள்ளப்பட்டுள்ளன.
புதுச்சேரி அரசு கூட்டுறவு சங்கங்களின் மூலம் நடத்தப்பட்டு வந்த அரசு சார்பு நிறுவனங்களான பாண்டெக்ஸ், பாப்ஸ்கோ, பாசிக், பாண்லே, அமுதசுரபி, பாண்பேப் அனைத்து அரசு நிறுவனங்களும் புதுச்சேரி மாநிலத்துக்கு வருவாய் ஈட்டுவதில் பெரும் பங்களிப்பாக திகழ்ந்து வந்தன. 2011-க்கு பிறகு நிர்வாக சீர்கேடுகளால் சில தகுதியற்ற வாரியத் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளின் செயல்பாடு காரணமாக புதுச்சேரி அனைத்து அரசு சார்பு நிறுவனங்களும் நஷ்டத்தில் இயங்குவதற்கான நிலைக்கு தள்ளப்பட்டன என்கின்றனர் தொழிலாளர்கள்.
குறிப்பாக, பாண்டெக்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து ஒய்வுபெற்ற தொழிலாளர்கள், பணிபுரியும்போது இறந்த தொழிலாளர்களுக்கு சேரவேண்டிய பணப் பலன்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு கட்ட வேண்டிய பிஎஃப் பண பலன்கள் 2019-ம் ஆண்டுகளுக்கு பிறகு வழங்கப்படவில்லை. இதுதொடர்பாக நாம் தமிழர் தொழிலாளர் நலச்சங்கத்தின் மாநிலச் செயலர் ரமேசு கூறியதாவது: பாண்டெக்ஸில் பணிபுரிந்து 2018-ம் ஆண்டு ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் அனைவருக்கும் பாண்டெக்ஸ் நிர்வாகத்தால் வழங்கப்பட வேண்டிய பணப்பலன்கள் குறைந்தபட்சம் ரூ.7 லட்சம் முதல் அதிகப்பட்சம் ரூ.20 லட்சம் வரை வழங்கப்படாமல நிலுவையில் உள்ளது. 2019, 2021, 2023 காலகட்டத்தில் பாண்டெக்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும்போது உயிரிழந்த முருகன், சுதர்சன், குமார் ஆகிய தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பணிக்கொடை, பிஎஃப் பணப்பலன்கள் வழங்கப்படாமல் உள்ளது.
பாண்டெக்ஸில் 35 வருடங்களுக்கு மேலாக, தற்போதும் பணிபுரிந்து வரும் தொழிலாளர்க ளுக்கு மாதந்தோறும் வழங்கப்பட வேண்டிய மாதாந்திர ஊதியம் சரியான முறையில் வழங்கப்படாமல் இன்னல்படுகின்றனர். தட்டாஞ்சாவடி பாண்டெக்ஸ் கொள்முதல் பிரிவான பண்டக சாலையில் (ஸ்டோர்) 1 லட்சம்மீட்டர் (60-க்கு 60) சேலை காடா துணி இருப்பு வைக்கப்பட்டுள்ளது. ஒருகோடி ரூபாய்மதிப்புடைய நெசவாளர்களால் நெய்யப்பட்ட சேலை காடா துணி இந்நாள் வரை பயன் படுத்தாமல் வீணாகி வருவது செயல்பாடற்ற நிலையை தோலுரித்து காட்டுகிறது. முதல்வர், கூட்டுறவு துறை செயலாளர், பாண்டெக்ஸ் நிர்வாக மேலாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
பாண்டெக்ஸில் பணிபுரிந்து இறந்ததொழிலாளர்கள், ஓய்வுபெற்ற தொழிலாளர் களுக்கு வழங்கப்பட வேண்டிய பணிக்கொடை பிஎஃப், நிலுவையில் உள்ள மாதாந்திர ஊதியத்துக்குரிய பணப்பலன்கள் அனைத்தும் உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். நெசவுத் தொழிலையும், நெசவாளர்கள் குடும்பங்கள் மற்றும் பாண்டெக்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களின் வாழ்வுரிமையை காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன், பண்டிகை காலங்களில் நம் நெசவாளர்கள் உருவாக்கிய ஆடையை அரசு தரும் 25 சதவீத தள்ளுபடியுடன் கைத்தறி விற்பனையகங்களில் வாங்கி, அவர்களுக்கு கைகொடுக்க வேண்டியது நம் கடமையும் கூட