Published : 19 Jan 2018 10:34 AM
Last Updated : 19 Jan 2018 10:34 AM

வணிக நூலகம்: அலுவலக அரசியல் அறிவோம்!

ரசியல் இல்லாத அலுவலகம் அல்லது பணியிடம் ஒன்று உண்டா? என்ற கேள்விக்கு, “இல்லை” என்பதே நம்மில் பெரும்பாலானோரின் பதிலாக இருக்கக்கூடும். சில சூழல்களில் ஒரிஜினல் அரசியலையே தூக்கிச் சாப்பிட்டுவிடும் அளவிற்கான வலிமையுடன் இருக்கிறது அலுவலக அரசியல். ஆக, ஏதோ ஒரு வகையில் பணியிட அரசியலானது நம்மிடையே இருக்கப்போவது நிச்சயம். அதை ஏன் நமது முன்னேற்றத்திற்கும் நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் ஏற்ற, நல்ல விஷயமாக மாற்றிக்கொள்ளக்கூடாது என்பதை அடிப்படையாகக்கொண்டு “மார்க் ஹோல்டன்” என்கிற ஆசிரியர் எழுதியதுதான்“தி யூஸ் அண்ட் அப்யூஸ் ஆஃப் ஆபீஸ் பாலிடிக்ஸ்” என்னும் இந்தப் புத்தகம்.

இருவேறு வகைகள்!

நேர்மறை அரசியல் மற்றும் எதிர்மறை அரசியல் என அலுவலக அரசியலின் இருவேறு வகைகளைப்பற்றி விவரித்துள்ளார் ஆசிரியர். நமக்கான அரசியல் சூழ்நிலைகளை நாம் எவ்வாறு கையாளுகிறோம் என்பதே, அதிலிருந்து நம்மை எவ்வாறு பாதுகாத்துக்கொள்கிறோம் என்பதற்கான அடிப்படை. ஆம், நாம் கையிலெடுக்கப்போவது நேர்மறை வழிமுறையா அல்லது எதிர்மறை வழிமுறையா என்பதே முக்கியம். வருவது வரட்டும், அதை நான் நல்ல வழிகளில் பயன்படுத்திக்கொள்வேன் என்று முடிவுசெய்துவிட்டால், எவ்வித அரசியல் சுனாமியிலும் நம்மால் நீந்திக் கரையேற முடியும் என்பதை உணர்வோம்.

பொதுவாக அலுவலக அரசியலானது பணியாளர்களின் கவனத்தை அவர்களது பணியிலிருந்து வெகு தூரத்திற்கு திசைதிருப்பிவிடுகிறது. அதுவும், எதிர்மறை அரசியலானது நிறுவனப் பணியாளர்களின் ஒட்டுமொத்த ஆற்றலையும் வீணடிக்கும் விஷயமாகவே பார்க்கப்படுகிறது. இதுவே, நேர்மறை அரசியலை நன்றாகப் புரிந்துக்கொள்வதும், திறம்படக் கையாளக் கற்றுக்கொள்வதும் நமது பணியில் மிகச்சிறந்த திருப்தியை நமக்கு ஏற்படுத்தும். மேலும் நமது தனிப்பட்ட அலுவலக செயல்பாடுகளை ஆர்வமானதாகவும், முழுமையானதாகவும் மாற்றும். இதுவே, ஒரு நிறுவனத்தின் பெரும்பாலான பணியாளர்கள் நேர்மறை அரசியலை முன்னெடுத்துச் செயல்படும்போது, நிச்சயமாக ஒட்டுமொத்த நிறுவனமும் வளர்ச்சியை நோக்கிச்செல்லும் என்பதே ஆசிரியரின் கூற்றாக உள்ளது.

சாதக பயன்பாடு!

நமது அலுவலகத்தில் நம்மைச் சுற்றியுள்ள அரசியல் சூழலை எவ்வாறு நமக்கு சாதகமானதாக பயன்படுத்திக்கொள்வது என்பதற்கான வழிமுறைகளாக ஆறு விஷயங்களைச் செய்யச் சொல்கிறார் ஆசிரியர். முதலாவதாக, நமது பணியிட உறவுகளின் நெட்வொர்க்கின் செயல்பாடுகளை மிகுந்த மதிநுட்பத்துடன் கண்காணிக்க வேண்டும். இரண்டாவதாக, நிறுவனத்திற்குள் பல்வேறு மாறுபட்ட நிலைகளிலும் உள்ள பணியாளர்களிடம் நட்பான அணுகுமுறையைக் கடைபிடிக்க வேண்டும். மூன்றாவதாக, எதிர்காலத்தில் உங்களுக்கு திறம்பட உதவும் நபர்களை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். நான்காவதாக, அதிகப்படியான நபர்களுக்கு உதவி செய்யும் வகையில் ஆதரவுக் கரம் நீட்ட வேண்டும். ஐந்தாவதாக, மாற்றுக் கருத்துகளை ஓரம்கட்டிவிட்டு ஒன்றுபட்ட கருத்துகள் மற்றும் திட்டங்களில் கவனம் செலுத்தவேண்டும். ஆறாவதாக, தேவையற்ற முரண்பாடுகளை முற்றிலும் தவிர்க்கவேண்டியது அவசியம்.

சாதக கட்டமைப்பு!

அரசியல் சூழ்நிலையை நேர்மறையானதாக நாமே கட்டமைத்துக்கொள்வதற்கான செயல்களைப்பற்றி விவரித்துள்ளார் ஆசிரியர். இதற்கென மிக வலுவான அடிப்படையை அமைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். நமது தகுதி, திறமை, அனுபவம், நம்பிக்கை, உறவுமுறைகள் ஆகியன இதில் முக்கியப்பங்கு வகிக்கின்றன. நமக்கான துறையில் நமது துல்லியமான செயல்பாடு, நமது செயல்பாடுகளுக்கான ஆலோசனைகளை தேடிப்பிடித்து பயன்படுத்துதல், கடினமான பணிகளில் திறம்பட உழைத்தல், தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளுதல், வலிமையாக மற்றும் உண்மையாக கருத்துகளை முன்வைத்து செயல்படுதல், முறைபடுத்தப்பட்ட அமைப்பு மற்றும் வரம்பிற்குள் பணியாற்றுதல், தீர்வுகளுடன் பிரச்சனைகளை அணுகுதல், நேர்மையாகவும் திறந்த மனதுடனும் செயல்படுதல், பயனற்ற விவாதங்களிலிருந்து ஒதுங்கியிருத்தல் போன்ற அடிப்படை விஷயங்களை மேம்படுத்திக்கொள்ளும்போது வலிமையான நேர்மறை அரசியல் சூழ்நிலை நிச்சயம் நமக்கு அமையப்பெறும்.

ஆழமான அறிவாற்றல்!

நீங்கள் ஒரு கணிதவியலாளரா, அப்படியானால் கணிதவியல் சூத்திரங்களை நன்றாக அறிந்துக்கொள்ளுங்கள். நீங்கள் ஒரு பெயிண்டரா, அப்படியானால் நிறங்களின் கலவைகளைப்பற்றி திறம்பட அறிந்துக்கொள்ளுங்கள். நீங்கள் ஒரு மருத்துவரா, அப்படியானால் மருந்துகளின் தன்மையைப்பற்றி தெளிவாக அறிந்துக்கொள்ளுங்கள். நாம் எந்த துறையில் பணிபுரிகிறோமோ அதிலுள்ள அத்துணை விஷயங்களிலும் வலுவான அறிவாற்றலைப் பெற்றிருத்தல் அவசியம். இந்த தகுதியானது நேர்மறை அலுவலக அரசியலில் முக்கியப்பங்கு வகிக்கின்றது. அதாவது, நமது பணியில் நாமே வல்லவர் என்ற நிலையை உருவாக்கினால் மட்டுமே, நமக்கான அரசியலில் மற்றவர்களைக் காட்டிலும் நம்மால் திறம்பட செயலாற்றவும், அந்த சூழ்நிலையை நன்கு கையாளவும் முடியும் என்கிறார் ஆசிரியர்.

நமக்கான நற்பெயர்!

நமது செயல், நடத்தை முறைகள், எதிர்வினை, தொடர்புகள், பரிமாற்றங்கள், தகுதிகள், திறமைகள் மற்றும் பேச்சு என அனைத்தும் சேர்ந்தே நமக்கான நற்பெயரினைப் பெற்றுத் தருகின்றன. இந்த நற்பெயரின் தரமே, நமக்கான பணியிட சூழலை உருவாக்குவதில் செல்வாக்கு செலுத்துகின்றன என்கிறார் ஆசிரியர். பணியிட செயல்பாடுகளில் தொடர்ச்சியான கற்றல், இலக்குகளை நிர்ணயித்தல், உன்னதமான அணுகுமுறைகள், நேர்மறை செயல்பாடுகள், எவ்வித பணியையும் ஏற்றுக்கொள்ளுதல், குழுவாகச் செயல்படுதல் மற்றும் தனிப்பட்ட விஷயங்கள் ஆகியனவற்றை நடைமுறைப்படுத்துவதோடு, நிறைய நிறைய நபர்களை நமக்கான நலம் விரும்பிகளாக நிறுவனத்திற்கு உள்ளேயும் வெளியேயும் ஏற்படுத்திக்கொள்வதும் நற்பெயருக்கான காரணியாகப் பார்க்கப்படுகிறது.

மனித நடத்தைகள்!

பணியிடத்தில் எந்த மாதிரியான நடத்தை முறைகள் அல்லது பழக்கவழக்கங்கள் அரசியல் உறவுமுறைகள் அல்லது தொடர்புகளுக்கு உகந்தது என்பதற்கான புரிதலை தந்துள்ளார் ஆசிரியர். அரசியல் அனுகூலம் நமக்கு கிடைக்கவேண்டுமானால், எந்த சூழ்நிலையில் எந்த விதமான பழக்கவழக்கங்களை பயன்படுத்துவது என்பதை நன்கு அறிந்து வைத்திருப்பதே அடிப்படை. அடுத்ததாக, நமது தனிப்பட்ட நடத்தை முறைகளின் மீதான உள்ளார்ந்த பார்வை இருக்க வேண்டும். மேலும், இது மற்றவர்களால் எளிதாக ஏற்றுக்கொள்ளும் வகையில் மாறுவதற்கு துணைபுரியும். சக பணியாளர்களின் திட்டம் மற்றும் முடிவுகளில் குறிப்பிடத்தக்க வகையில் செல்வாக்கு செலுத்தும் வகையிலான சூழல் அமையப்பெற வேண்டும். அதுபோல நமது யோசனைகள் மற்றும் திட்டங்களுக்கு சிறப்பான ஆதரவினை எளிதான வகையில் பெறவேண்டிய நிலை வேண்டும்.

தொழில் ரீதியிலான மற்றவர்களின் பலம் மற்றும் பலவீனம் ஆகியவற்றை எளிமையாக அறிந்துக்கொண்டு, அதற்கேற்ற செயல்பாடுகளை மேற்கொள்ளுதல், அதிலும் கடந்த காலங்களில் நம்முடன் மோதல் போக்கினை கொண்டிருந்தோரிடம் நல்ல உறவினை வளர்த்தெடுக்க முயலவேண்டும். இவற்றையெல்லாம் நன்கு அறிந்து செயல்படுத்தும்போது, மனித நடத்தை முறைகள் எவ்வாறு அரசியல் அனுகூலங்களைப் பெற்றுத்தருகிறது என்பதை நன்கு உணரலாம்.

எதிரியை தெரிந்துக்கொள்ளுங்கள்!

என்னதான் எதிர்மறை அரசியல் தேவையில்லை என்றாலும், அதனைப்பற்றி சிறிது அறிந்துவைத்துக்கொள்ளுதல் நேர்மறை அரசியலை முன்னெடுக்க உதவியாக இருக்கும் என்பதையும் ஆசிரியர் குறிப்பிடத் தவறவில்லை. அலுவலகத்தில் எந்த மாதிரியான சூழலில் இந்த எதிர்மறை அரசியல் ஏற்படுகிறது, அதை மேற்கொள்பவர்களின் மனோபாவம் என்ன, ஏன் அதை அவர்கள் கையிலெடுக்கிறார்கள், ஏதேனும் பழிவாங்கும் நடவடிக்கையா போன்ற விஷயங்களையும் அறிந்துக்கொள்ளல் அவசியம்.

இவையெல்லாம் தவிர, பணிபுரியும் நிறுவனத்தின் பாரம்பரியம் மற்றும் கலாசாரமும் கூட பணியிட அரசியலில் பங்கு வகிக்கின்றன. வருவதையெல்லாம் நேர்மறையாக மாற்றி நேர்மையாக செயல்படும்போது, அரசியலும் நமக்கு அடிமையே.p.krishnakumar@jsb.ac.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x