ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் வங்கிகளில் ரூ.5,716 கோடி கடன் பெற்று மோசடி: அமலாக்கத் துறை தகவல்

அனிதா கோயல், நரேஷ் கோயல்
அனிதா கோயல், நரேஷ் கோயல்
Updated on
1 min read

மும்பை: ஜெட் ஏர்வேஸ் வழக்கில் அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அதில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல், எஸ்பிஐ, பஞ்சாப் நேஷனல் வங்கி உட்பட 8 வங்கிகளிடமிருந்து ரூ.5,716 கோடி கடன் பெற்று சட்டத்துக்குப் புறம்பான வழிகளில் மடைமாற்றியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை கடந்த வெள்ளிக்கிழமை விசாரித்த பணமோசடி தடுப்பு சிறப்பு நீதிபதி எம் ஜி தேஷ்பாண்டே, குற்றப்பத் திரிகையை ஆய்வு செய்த பின்னர் வங்கிகளிடமிருந்து பெற்ற கடனை சட்டத்துக்குப் புறம்பான வழியில் மடைமாற்றியதை நிரூபிக்கும் ஆதாரங்கள் உள்ளன என்று குறிப்பிட்டார்.

இரு தினங்களுக்கு முன்பு நரேஷ் கோயல் குடும்பத்துக்கு சொந்தமான ரூ.538 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது.

நரேஷ் கோயல், அவரது மனைவி அனிதா கோயல், அவர்களது மகன் நிவான் கோயல் ஆகியோரின் வீடுகள், அலுவலகங்கள் உட்பட 17 சொத்துகள் முடக்கப்பட்டன. பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் 1992-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. முன்னணி இடத்தில் இருந்த ஜெட் ஏர்வேஸ் 2017-ம் ஆண்டுப் பிறகு நஷ்டத்தைச் சந்திக்கத் தொடங்கியது. இழப்பு அதிகமான நிலையில், 2019 ஏப்ரல் மாதம் ஜெட் ஏர்வேஸ் அதன் விமான சேவையை முழுமையாக நிறுத்தியது.

இந்நிலையில் ஜெட் ஏர்வேஸின் நிறுவனர் நரேஷ் கோயல் மற்றும் அவரது மனைவி அனிதா கோயல் ரூ.538 கோடி கடன்பெற்று மோசடி செய்துள்ளதாக கனரா வங்கி அளித்த புகாரின் பெயரில் கடந்த மே மாதம் சிபிஐ வழக்குப் பதிவு செய்து சோதனை நடத்தியது.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் வங்கிகளில்இருந்து பெற்ற கடன்களை நிறுவனச் செயல்பாடுகள் சார்ந்து இல்லாமல் வேறு விஷயங்களுக்கு பயன்படுத்தியுள்ளது என்று தனது விசாரணையின் அடிப்படையில் சிபிஐ தெரிவித்தது. அமலாக்கத் துறையும் ஜெட்ஏர்வேஸ் நிறுவனம் மீது பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணையை தொடங்கியது. கடந்த செப்டம்பர் மாதம் நரேஷ் கோயலை அமலாக்கத்துறை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in