

திருச்சி: மேட்டூர் அணை மூடப்பட்டுள்ளதாலும், போதிய மழை பெய்யாததாலும் பயிர்க் காப்பீட்டுக்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வழக்கமாக டெல்டா மாவட்டங்களில் சம்பா மற்றும் தாளடி சாகுபடி ஏறத்தாழ 8 லட்சம் ஏக்கரில் நடைபெறும். ஆனால், நிகழாண்டு மேட்டூர் அணை பாதியிலேயே மூடப்பட்டதாலும், போதிய அளவில் மழை இல்லாததாலும் விவசாயிகள் சம்பா சாகுபடி பணிகளை தொடங்காமல் உள்ளனர்.
பம்பு செட் வசதியுள்ள இடங்களில் மட்டும் விவசாயிகள் நடவுப் பணிகளை தொடங்கியுள்ளனர். இந்த நிலையில், நிகழாண்டு சம்பா பயிருக்கு காப்பீடு செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என டெல்டா விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து காவிரி டெல்டா விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் ஆறு பாதி கல்யாணம் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது: போதிய தண்ணீர் இல்லாமல் மேட்டூர் அணை மூடப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையும் இன்னும் முழு அளவில் தொடங்கவில்லை. இதனால், சம்பா சாகுபடி பணிகளை பெரும்பாலான விவசாயிகள் தொடங்காமலேயே தயக்கத்தில் உள்ளனர்.
இந்த சூழ்நிலையில் சம்பா பயிருக்கு காப்பீடு செய்ய நவ.15-ம் தேதி இறுதி நாள் என்பது, சாகுபடியை தாமதமாகத் தொடங்கும் விவசாயிகள் பயிர்க் காப்பீடு செய்ய இயலாத நிலையை ஏற்படுத்தும். எனவே, பயிர்க் காப்பீட்டுக்கான காலக்கெடுவை டிசம்பர் 15-ம் தேதி வரை நீட்டிக்க மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.
ஏற்கெனவே குறுவை பருவத்தில் பயிரிட்டு தண்ணீர் இல்லாமல் பயிர்கள் காய்ந்து, மகசூல் இழப்பு ஏற்பட்டு விவசாயிகள் நஷ்டமடைந்துள்ள சூழலில், சம்பா பயிருக்குரிய காப்பீட்டு பிரீமியத் தொகையை தமிழக அரசே செலுத்தி, விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் என்றார்.
சிட்டா, அடங்கல் தர மறுப்பு: திருவாரூர் மாவட்டம் சிங்களாந்தி விவசாயி சங்கர ராமன், கீரக்களூர் விவசாயி சிங்காரம் ஆகியோர் கூறியது: நேரடி தெளிப்பு முறையில் சம்பா சாகுபடி மேற்கொண்ட பல இடங்களில் போதிய தண்ணீர் இல்லாததால் பயிர்கள் சரியாக முளைக்கவில்லை. சில இடங்களில் முளைத்த பயிர்களும் கருகி விட்டன.
இந்த சூழலில் மறு தெளிப்பு செய்துள்ளோம். தற்போது அவ்வப்போது பெய்யும் மழையால் பயிர்கள் முளைக்கத் தொடங்கியுள்ளன. இந்த நிலையில், காப்பீடு செய்ய சிட்டா, அடங்கல் கேட்டு விண்ணப்பித்தால், பயிர்கள் முளைக்கும் முன் அவற்றை வழங்க வருவாய்த் துறையினர் மறுத்து வருகின்றனர். மேலும், காலக்கெடுவும் குறைவாக உள்ளது.
எனவே, பயிர்க் காப்பீடு செய்வதற்கான காலக்கெடுவை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிக்க வேண்டும் என்றனர். நேரடி தெளிப்பு முறையில் சம்பா சாகுபடி செய்த பல இடங்களில் தண்ணீரின்றி பயிர்கள் சரியாக முளைக்கவில்லை.