

புதுடெல்லி: இந்தியாவுக்கு திரவ இயற்கை எரிவாயுவை (எல்என்ஜி) அதிக அளவில் ஏற்றுமதி செய்வதில் கத்தார் முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த நாட்டைச் சேர்ந்த கத்தார் ஏர்வேஸ் விமான சேவை நிறுவனம் பல ஆண்டுகளாக ரூ.5,700 கோடி அளவுக்கு ஜிஎஸ்டி வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, அமலாக்கத் துறை (இடி) அதிகாரிகள் கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்தின் மீதான விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
ஆனால், இந்த வரி ஏய்ப்பு குற்றச்சாட்டுகளுக்கு கத்தார் ஏர்வேஸ் மறுப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பான விசராணைக்கு இந்திய அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க தயாராக இருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. உளவு பார்த்த குற்றச்சாட்டின்பேரில் இந்திய கடற்படையின் முன்னாள் உயரதிகாரிகள் உள்ளிட்ட 8 பேருக்கு கத்தார் மரண தண்டனை வழங்கியது. அவர்களை மீட்க மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் ராஜதந்திர நடவடிக்கைகளை கையாண்டு வரும்நிலையில் கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்தின் மீதான இந்த வரி ஏய்ப்பு குற்றச்சாட்டு இருநாட்டு உறவில் மேலும் சிக்கலை உருவாக்கியுள்ளது.
எல்என்ஜி இறக்குமதி பாதிக்கப்படாமல் இருப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுடனும் இந்தியா அதற்கான பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது.