Published : 03 Nov 2023 03:03 PM
Last Updated : 03 Nov 2023 03:03 PM

பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் | தமிழகத்தின் 7 மாவட்டங்களில் 14,211 பயனாளிகள் பதிவு

கைவினைப் பொருட்களை பார்வைியிடும் மத்திய அமைச்சர் புருஷோத்தம் ரூபாலா | கோப்புப் படம்

புதுடெல்லி: பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தில் தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இதுவரை 14 ஆயிரத்து 211 பயனாளிகள் பதிவு செய்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்ட தகவல்: பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் தமிழகத்தின் 7 மாவட்டங்களில் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தில் பயன்பெறுவதற்காக கடந்த மாதம் வரை 14 ஆயிரத்து 211 பயனாளிகள் பதிவு செய்துள்ளனர்.

இத்திட்டத்தில் பயன்பெற விரும்புபவர்கள் பொதுச்சேவை மையங்களின் மூலம் பதிவு செய்துள்ளனர். கடந்த மாதம் வரை கோயம்புத்தூர் மாவட்டத்தில் 5510 பேரும், ஈரோடு மாவட்டத்தில் 1568 பேரும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 2287 பேரும், ராமநாதபுரம் மாவட்டத்தில் 1282 பேரும் பதிவு செய்துள்ளனர். இதேபோல், நீலகிரி மாவட்டத்தில் 384 பேரும், திருப்பூர் மாவட்டத்தில் 1286 பேரும், விருதுநகர் மாவட்டத்தில் 1894 பேரும் பதிவு செய்துள்ளனர். இத்திட்டத்தில் பயனடைய தேர்வு செய்யப்படுவதற்கு மூன்றடுக்கு சரிபார்ப்பு நடைமுறைகள் மேற்கொள்ளப்படும்.

பதிவு செய்தவர்கள் தொடர்பான மூன்று கட்ட சரிபார்ப்பு நடைமுறைகளுக்குப் பின்னர் இத்திட்டத்தில் பயனடைவதற்கான பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள். இத்திட்டம் கடந்த செப்டம்பர் 17ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது. தச்சர், செருப்பு தைப்பவர், படகு கட்டுபவர், மேஸ்த்ரி, பொற்கொல்லர், பொம்மை தயாரிப்பவர், துணி துவைப்பவர், தையல் தொழில் செய்பவர், குயவர், மீன்பிடி வலை செய்பவர், சிற்பி உள்ளிட்ட 18 வகையான பாரம்பரிய கைவினை கலைஞர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், 13 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சகம், திறன் மேம்பாட்டு அமைச்சகம், நிதி அமைச்சகத்தின் நிதி சேவைகள் துறை ஆகியவை இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்துகின்றன என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x