Published : 31 Oct 2023 04:47 PM
Last Updated : 31 Oct 2023 04:47 PM

கூடுதல் விலைக்கு யூரியா விற்பனை: தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் கவலை

எட்டயபுரம் அருகே அயன்வடமலாபுரத்தில் உள்ள மானாவாரி நிலத்தில் பயிரிடப்பட்ட மக்காச்சோள பயிருக்கு யூரியா உரமிடும் விவசாய தொழிலாளர்கள்.

கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 1.70 லட்சம் ஹெக்டேர் மானாவாரி விவசாய நிலங்கள் உள்ளன. இவற்றில் ஆவணி கடைசி வாரம் பருத்தி, மக்காச்சோளம் விதைகளை ஊன்றினர். புரட்டாசி முதல் வாரத்தில் உளுந்து, பாசிப்பயறு, வெள்ளைச் சோளம், கம்பு, வெங்காயம், மிளகாய், கடைசி பட்டமாக ஐப்பசி 2-வது வாரம் முதல் சூரியகாந்தி, கொத்தமல்லி ஆகியவற்றை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். கால் நடை வளர்ப்பு மிகவும் குறைந்துவிட்டதால் நிலங்களில் விதைப்பு செய்வதற்கு முன்னர் அடி உரமாக டிஏபி உரம் ஏக்கருக்கு 50 கிலோ வீதம் பயன்படுத்துகின்றனர்.

சில சமயங்களில் மூலப்பொருட்கள் தட்டுப்பாட்டால் உரம் பற்றாக்குறை ஏற்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் அடி உரம் டிஏபி, மேலுரம் யூரியாவுக்கு தட்டுப்பாடு ஏற்படுகிறது. விவசாயிகளின் சிரமத்தை கருத்தில் கொண்டு அரசு முன்கூட்டியே தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களிடம் தேவைப்படும் உரம் குறித்த விவரங்களை பெற்று கடந்த மாதம் தேவையான அளவு டிஏபி உரத்தை வழங்கியது.

இதன் விலையும் கடந்த ஆண்டை போலவே ஒரு மூட்டை ரூ.1,350 ஆக நிர்ணயம் செய்து விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. ஆனால் டிஏபி போல் யூரியா இன்னும் அனைத்து தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கும் அனுப்பிவைக்கப்படவில்லை. இதனை பயன்படுத்தி யூரியா உரத்தை அரசு நிர்ணயித்த விலையை காட்டிலும் அதிக லாபத்துக்கு விற்பனை செய்வதாக விவசாயிகள் குற்றஞ் சாட்டியுள்ளனர். தாமதமாக பெய்த மழை காரணமாக முளைத்த பயிர்களை காப்பாற்ற வேண்டி கூடுதல் விலை கொடுத்து யூரியாவை வாங்கி வந்து நிலங்களில் தூவி வருகின்றனர்.

இதுகுறித்து கரிசல்பூமி விவசாயிகள் சங்க தலைவர் அ.வரதராஜன் கூறியதாவது: ஆண்டுக்காண்டு ரசாயன உரங்களின் தேவை அதிகரித்து வருகிறது. இந்த உரங்கள் மங்கள், கிரிப்கோ, இப்கோ, ஸ்பிக், விஜய் போன்ற தனியார் உர நிறுவனங்களால் தயாரிக்கப்படுகிறது. இந்தாண்டு பருவத்துக்கு ஏற்ற மழை பெய்யாததால் ஒரு சில நிலங்களில் பயிர்கள் முளைத்தும், சில நிலங்கள் வறட்டு உழவாகவும், சில நிலங்களில் அரைகுறை ஈரப்பதத்தில் முளைத்த பயிர்கள் கருகியும் காணப்படுகின்றன.

பரவலாக சில பகுதிகளில் நேற்று மழை பெய்ததால் முன்கூட்டியே முளைத்து வாடிய பயிர்களுக்கு ஊக்கமளிக்க யூரியா உரமிட வேண்டி உள்ளது. விவசாயிகள் உரக்கடைகளுக்கு சென்று யூரியா உரம் வாங்க முற்படும்போது 45 கிலோ மூட்டை சில்லரை விலை ரூ.265-க்கு பதில் ரூ.400 முதல் ரூ.450 வரை கூடுதல் விலைக்கு விற்கின்றனர்.

ஏற்கெனவே போதிய மழையின்றி ஒரு முறைக்கு மும்முறை விதைப்பு செய்து விட்டு கடனாளியாக விவசாயிகள் இருக்கும் நிலையில் கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்வதால் செய்வதறியாமல் தவிக்கின்றனர். எனவே, கூடுதல் விலைக்கு உரம் விற்கும் கடைகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். தாமதம் செய்யாமல் அனைத்து கூட்டுறவு கடன் சங்கங்களுக்கும் உடனடியாக யூரியா உரம் வழங்க வேண்டும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x