

சேலம்: பண்டிகை காலம் என்பதால் தேவை அதிகரித்து சேலம் மாவட்ட உழவர் சந்தைகளில் வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளது.
சமையலுக்கு அத்தியாவசிய தேவையான காற்கறிகளில் ஒன்றாக, வெங்காயம் உள்ளது. இதில், சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயம் என இரண்டுமே மக்களால் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. சில வாரங்களுக்கு முன்னர் வரை, சின்ன வெங்காயத்தின் விலை கிலோ ரூ.50-க்கும், பெரிய வெங்காயத்தின் விலை கிலோ ரூ.30-க்கும் விற்பனையானது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக வெங்காயத்தின் விலை உயர்ந்து வந்துள்ளது. சேலம் மாவட்ட உழவர் சந்தைகளில் சின்ன வெங்காயம் அதிக பட்சம் கிலோ ரூ.70-க்கும், பெரிய வெங்காயம் ரூ.65-க்கும் விற்பனையாகிறது. வெளிச் சந்தைகளில், வெங்காயத்தின் தரத்துக் கேற்ப, விலை மேலும் கூடுதலாக விற்பனை செய்யப்படுகிறது.
இது குறித்து வெங்காய வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் கூறியது: ”சேலம் மற்றும் அண்டை மாவட்டங்களில் சின்ன வெங்காயம் பரவலாக பயிரிடப்படுகிறது. தற்போது, சில இடங்களில் வெங்காயம் அறுவடைக்கு தயாராக உள்ளது. இந்நிலையில், சில வாரங்களாக மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்ததால், வெங்காய அறுவடை மற்றும் வெங்காய விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால், சந்தைக்கு சின்ன வெங்காயம் வரத்து குறைந்துள்ளது. கர்நாடக மாநிலம் தாவணகெரே, பெல்லாரி, மகாராஷ்ரா மாநிலம் நாசிக் போன்ற இடங்களில் இருந்து, பெரிய வெங்காயம் தமிழகத்துக்கு அதிக அளவில் கொண்டு வரப்படுகிறது. பெரிய வெங்காயம் அறுவடை சீசன் முடிவடைந்து விட்டதால், தற்போது, பெரிய வெங்காயம் வரத்தும் குறைவாக இருக்கிறது.
இந்நிலையில், முகூர்த்தம் மற்றும் பண்டிகை காலம் என்பதால், வெங்காயத்தின் தேவை அதிகரித்துள்ளது. எனவே, பெரிய வெங்காயத்தின் விலை உயரத் தொடங்கியுள்ளது. தரத்துக் கேற்ப, பெரிய வெங்காயத்தின் விலை கிலோ ரூ.45-ல் தொடங்கி, ரூ.60 வரை விற்பனை செய்யப்படுகிறது. சின்ன வெங்காயத்தின் விலை கிலோ ரூ.60 முதல் ரூ.80 வரை விற்பனையாகிறது,” என்றனர்.